Milk (Photo Credit: Pixabay)

ஜனவரி 23, சென்னை (Agri Tips): விளைபொருளுக்கு சரியான விலை கிடைக்காததே காலங்காலமாக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கான தீர்வு தான் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பது. இது மக்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதுடன், விவசாயிகளுக்கும் நல்ல வருமானத்தை ஈட்டித் தருகிறது. விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டுவதால், அவை அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். மேலும், உற்பத்தி செய்வதைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்ட முடியும். பாலும் இதற்கு விதிவிலக்கல்ல. ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள பால், நம் அன்றாட வாழ்வில் எதோவொரு வடிவில் நமக்கு பயன்படுகிறது. உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், நாளுக்கு நாள் மக்களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் பால் மட்டுமல்லாமல், பால் பொருட்களின் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய தேவை உள்ளது.

எப்படி மதிப்பு கூட்டுவது?

பால் மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், கொள்முதல் நிலையங்களிலோ அல்லது நேரடியாகவோ பாலை விற்கும் போது, அதில் குறைவான வருமானமே கிடைக்கிறது. ஆனால், அதை மதிப்பு கூட்டி பால் பொருட்களாக விற்பனை செய்யும்போது, அதில் அதிக லாபத்தை ஈட்டலாம். ஒரு லிட்டர் பாலை ₹30-க்கு கொள்முதல் நிலையங்களில் வாங்குகிறார்கள் எனில், அது சுமாரான லாபத்தைத் தான் தரும். அதற்கு பதிலாக பாலைப் பதப்படுத்தி, அதில் உள்ள கொழுப்புச்சத்தை நீக்கி தனி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யலாம். மேலும் தயிர், வெண்ணெய், நெய் மற்றும் மோர் என தயாரித்தும் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யலாம். Wine Facial: வீட்டிலேயே செய்யும் ஒயின் ஃபேஷியல்.. வாங்க எப்படினு தெரிஞ்சிக்கலாம்.!

யோகர்ட், ஐஸ்கிரீம்:

சில எளிய தொழில்நுட்பங்கள் மூலம் பாலில் இருந்து பனீர், பால்பவுடர், யோகர்ட், சீஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றையும் தயாரித்து விற்பனை செய்யலாம். 1 லி பால் ₹35 எனில், அதிலிருந்து தயாரிக்கப்படும் நெய் லிட்டருக்கு ₹450 முதல் ₹800 வரை விற்கப்படுகிறது. இதைத் தவிர ரோஸ் மில்க், ரசமலாய், பால்கோவா உள்ளிட்ட பல இனிப்பு வகைகளையும் தயாரித்து விற்பனை செய்யலாம். இந்த பால் பொருட்களை வீட்டிலேயே அல்லது சிறிய தொழிற்கூடம் அமைத்தோ தயாரித்து விற்பனை செய்யலாம். இதை செய்ய அதிக இடவசதியும் அவசியமல்ல. மேலும், மதிப்புக்கூட்டலை குடிசைத் தொழிலாகவோ, தொழிற்சாலை முறையிலோ மேற்கொள்ளலாம். பால் பண்ணை அமைக்க மற்றும் அதனை மதிப்பு கூட்டி விற்க, அரசு பல்வேறு உதவிகளைச் செய்கிறது. மேலும், இயந்திரங்களை வாங்க மானியத்துடன் கூடிய கடன்களையும் வழங்கி வருகிறது.