அக்டோபர் 01, புதுடெல்லி (Festival News): இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 156வது பிறந்தநாள் அக்டோபர் 02-ஆம் தேதியான நாளை சிறப்பிக்கப்படுகிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி (Mahatma Gandhi), 1869ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கும், மக்களின் வாழ்க்கைக்கான தத்துவங்களுக்கும் மகத்தான பங்களிப்பைச் செய்த மகாத்மா காந்தியை நினைவு கூரும் வகையில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti) கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி என்று அன்போடு அழைக்கப்படும் இவர் இந்தியாவை சுதந்திரத்திற்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சுதந்திரத்திற்கான இயக்கங்களை ஊக்கப்படுத்தினார். Vijayadashami 2025: ஜெயம் தரும் விஜயதசமியில் பூஜை செய்ய உகந்த நேரம், வழிபாட்டு முறை.. துர்க்கையின் அருளை பெற கட்டாயம் செய்யுங்க.!
மகாத்மா காந்தியின் போராட்டங்கள் :
லண்டனில் சட்டம் படித்து தென் ஆப்பிரிக்காவில் 21 ஆண்டுகள் பணியாற்றிய காந்தி அங்கு இன பாகுபாடு, சமூக வேறுபாடு, அதிக வரிகள் போன்றவற்றுக்கு எதிராக அமைதியாக போராடி உலகின் கவனத்தை ஈர்த்தார். 1915ஆம் ஆண்டு இந்தியாவிற்கு திரும்பியவர், சாதி, மத, மொழிப் பிரிவுகள் போன்ற சமூக அநீதிக்கு எதிராக போராடி இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக 1921ல் பொறுப்பேற்றார். அகிம்சையை ஆயுதமாகக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக அமைதியான போராட்டங்கள், உப்புச் சத்தியாகிரகம் (1930), பிரிட்டிஷ் பொருட்கள் புறக்கணிப்பு போன்றவற்றை முன்னெடுத்தார். 1942 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வெள்ளையனே வெளியேறு என்ற எதிர்ப்பு முழக்கமிட்டார். இத்தனை சிறப்பு மிக்க காந்திக்கு ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா (Mahatma Gandhi) என்ற கௌரவத்தினை வழங்கினார்.
சுதந்திர இந்தியாவிற்கு காந்தியின் பங்கு :
சுதந்திர இந்தியாவில் 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டாலும், அகிம்சை மற்றும் மனிதநேயம் பற்றிய அவரது பொன்மொழிகள் இன்றும் உலகில் அனைவராலும் போற்றப்படுகின்றன. மகாத்மா காந்தியை நினைவுகூரும் காந்தி ஜெயந்தி நாட்டில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 2 அன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தி மிகவும் முக்கியமானவர். அவர் இல்லாவிடின் சுதந்திரம் என்பது நமக்கு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்திருந்திருக்குமா? என்பது சந்தேகம்தான். சுதந்திரத்தின் தாகம் மக்களிடையே எழுந்திருக்குமா? என்றாலும் சந்தேகம் தான். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் சமூகத்திலிருந்த தீண்டாமைக்கு எதிராகவும், அகிம்சை என்னும் அமைதி ஆயுதத்தினை கொண்டு போராடி, அதில் உலகமே வியந்து பார்க்கும் அளவில் வெற்றியையும் பெற்றவர் காந்தி (Happy Gandhi Jayanti).
மகாத்மா காந்தியின் பொன்மொழிகள் :
- கூட்டத்தில் நிற்பது எளிது, ஆனால் தனியாக நிற்பதற்கு தைரியம் வேண்டும்.
- எப்படி சிந்திக்க வேண்டும் என்று தெரிந்தவர்களுக்கு ஆசிரியர் தேவையில்லை.
- நேற்றைய தோல்விகளைப் பற்றி கவலைப்படாதீர்கள்; நிகழ்கால செயல்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
- உலகத்தை மாற்ற விரும்பினால், உங்களிலிருந்து தொடங்குங்கள்.
- மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.
- உயர்ந்த எண்ணங்களை உடையவர் ஒருநாளும் தனித்தவராக இருக்க மாட்டார்.
- உண்மையை எப்போதும் மறைக்காமல் சொல்லும் மனம் வேண்டும்.
- மனிதகுலத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் அமைதி.
- கோபம் அகிம்சையின் எதிரி; அகங்காரம் அதை விழுங்கும் அரக்கன்.
- உழைப்பவர்களின் கையில்தான் உலகம்; பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.