Dog (Photo Credit: Pixabay)

மார்ச் 10, சென்னை (Chennai News): நாட்டுநாய் குட்டிகள் வாங்குவதற்கு முன் அவற்றின் தாய் நாய் மற்றும் தந்தை நாயை நேரில் சென்று பார்க்க வேண்டும். அவைகள் சரியான பராமரிப்பில் உள்ளதா எனவும் அவைகளுக்கு ஏதேனும் வைரஸ் தாக்குதல் இருக்கிறதா எனவும் பார்க்க வேண்டும்.

10 முதல் 15 நாட்களுக்குள் குட்டிகள் கண் திறந்து பார்க்கும். 25 நாட்களுக்கு பிறகுதான் குட்டிகள், மேனியுவல் ஃபீடிங் செய்து மெதுவாக சாப்பிட ஆரம்பிக்கும். பொதுவாகவே எந்த குட்டிகள் வாங்கினாலும் 30 நாட்களுக்கு பிறகு வாங்குவது சிறந்தது.

வளர்ந்த பிறகு சரியான பராமரிப்பின்மையாலோ அல்லது கண்களில் அடிபட்டால் மட்டுமே பார்வையிழப்பேற்பட வாய்ப்பிருக்கிறது. இயற்கையாகவே பிறவியில் அனைத்து குட்டிகளுக்கும் கண்கள் தெரியும்.

இராஜபாளைய இனங்களில் மட்டும் தான் சில குட்டிகள் காது கேளா தன்மையுடன் பிறக்கும். இதைத்தான் கவனித்து வாங்க வேண்டும். குட்டிகளில் காது கேட்கிறதா இல்லையா என கண்டறிவது மிக சிரமம். 35 நாட்களுக்கு பிறகே அதன் காது கேட்கும் தன்மையை அறிய முடியும். சில குட்டிகளுக்கு மந்ததன்மையால், கேட்கும் திறன் வர 40 நாட்கள் வரை கூட ஆகும். 45 நாட்களுக்கு மேல் காது கேட்கவில்லை என்றால் அது பிறவியிலேயே காது கேட்காத குட்டி என்று அர்த்தம். இவைகளுக்கு உணர்வுத் தன்மையும், நுகரும் திறனும் மற்றவைகளை விட கூடுதலாகவே இருக்கும். ”உங்களுக்கு பிடித்திருந்த குட்டி காது கேட்கவில்லை என்றால் சற்று பொறுத்திருந்து குட்டிகள் வாங்கலாம்.”

நாய்களுக்கு கால் வளைவது பிறவி அல்லது மரபு கோளாறோ இல்லை. சரியான வளர்ப்பு பராமரிப்பு இல்லாமல் போவதால் இக்குறைபாடு நாய்களுக்கு உண்டாகும். குட்டிகளின் பெற்றோருக்கு கால் வளைந்திருந்தால் அது குட்டிகளை பாதிக்கும் என்று கிடையாது. கன்னி சிப்பிபாறை போன்ற உயரமாக வளரக்கூடிய நாய்களுக்கு முதல் 8 மாதத்திற்கு, அவற்றிற்கு தேவையான கால்சியம் கொடுக்காமல் வளர்ப்பதால் தான் நாய்களுக்கு கால்கள் வளையும் தன்மை ஏற்படும்.

25 முதல் 30 நாட்களுக்குள் அல்லது 45 நாட்களுக்குள் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசிகள் போட்டு தாயுடன் இருக்கும் குட்டிகள் வாங்குவது நல்லது. தாங்களாக குட்டிகள் எடுத்து சென்றுவிட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள நினைப்பவர்கள், குட்டிகள் தடுப்பூசியை தாங்கும் அளவிற்கு எதிர்ப்புசக்தி வந்து சுறுசுறுப்பான பின் தடுப்பூசியை போடலாம். Female Leader: தலைமை தாங்குவதற்கு பெண்களுக்கு தேவையானவை.. அசத்தல் டிப்ஸ் இதோ..!

இராஜபாளையம் மற்றும் இராமநாதபுர குட்டிகள்

இராஜபாளையம் குட்டிகள் பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கும். அது மூக்கு மட்டும் ரோஸ் நிறத்தில் இருக்கும். ஒரு சில குட்டிகளுக்கு உடலில் காவி நிறத்தில் புள்ளிகள் இருக்கும். சில குட்டிகள் குளிக்க வைக்கும் போது இப்புள்ளிகள் உடலில் ஆங்காங்கே தெரியும். இம்மாதிரியுள்ள குட்டிகள் கலப்படமில்லாத ராஜபாளைய குட்டிகள் தான்.

இராஜபாளைய குட்டிகளின் அளவைவிட சற்று பெரியதாக இருக்கும் இந்த இராமநாதபுர குட்டிகள். மேலும் இவைகள் பல நிறங்களில் இருக்கும். இதன் மூக்கு கறுப்பு நிறமுடையது.

சிப்பிபாறை மற்றும் கன்னி குட்டிகள்

சந்தனம், மயிழை, கறம்பை, செவலை, போன்ற பல நிறங்களில் சிப்பிபாறை உள்ளது. சிப்பிபாறை வாங்கும் போது குட்டியின் பெற்றோரைப் பார்த்து வாங்க வேண்டும். ஏனெனில் இவை ஒரிஜினல் குட்டிகளா என எளிதில் கண்டறிய முடியாது. 30 நாட்களுக்கு மேல் அதன் உருவ மற்றும் முக அமைப்பை வைத்தே குட்டிகளை கண்டறிய முடியும். இதே போல் தான் கன்னி நாய்குட்டிக்களையும் வாங்க வேண்டும். ஆனால் கன்னிகுட்டிகள் கறுப்பு கலந்த நிறத்தில் இருக்கும். அவைகளை பால்கன்னி, செங்கன்னி, கருங்கன்னி, தேன்கன்னி, என நிறத்திற்கேற்ப கண்டறியலாம். இவ்விரண்டு வகைகளும் ஒரே தாய் வழியில் வரும் குட்டிகள். இவை ஊசி முக அமைப்புடையவை.

கோம்பை குட்டிகள்

கோம்பை குட்டிகள் செவலை, கருஞ்செவலை, இரத்தசெவலை, மரசெவலை, நெஞ்சு வெள்ளை செவலை, புடனிவெள்ளை செவலை, பூவால் செவலை என அதன் நிறத்தின் அடிப்படையில் கண்டறியலாம். குட்டிகள் அடர் காவி நிறத்திலும்,. மூக்கு, கால், வால் மற்றும் காது பகுதிகளில் கருமையாகவும் காணப்படும். சில குட்டிகளுக்கு முதுகில் ஒரு கருமைக் கோடு விழுகும். 25 முதல் 30 நாட்களில் குட்டிகளின் நிறங்கள் சாதரண கோம்பை நிற காவி மற்றும் கறுப்பு நிறத்திற்கு மாறிவிடும்.