Bee (Photo Credit: Pixabay)

ஜனவரி 27, சென்னை (Chennai): தேனீக்களுக்கே உரிய தன்மையாக சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி மற்றும் உழைப்பு ஆகியவை சொல்லப்படுகின்றன. மிகச்சிறிய உயிரினமாக இருந்தாலும் தேனீக்கள் இந்த உலகிற்குப் பெரிய பங்காற்றி வருகிறது. இவை பல மைல் தூரம் தங்களது உணவுத் தேவைக்காக பயணிக்கின்றன. தேனீக்கள் தேன் மட்டுமல்லாமல் உணவுச் சங்கிலியிலும் பெரும்பங்காற்றுகின்றன. இந்த மண்ணில் தேனீக்கள் இல்லையென்றால், மனித இனம் நான்கு ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ முடியாது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூற்று நினைவில் கொள்ள வேண்டும்.

தேனீக்களின் பங்கு:

உலகின் மிகச்சிறந்த மகரந்த சேர்க்கையாளராக தேனீக்கள் உள்ளன. பூக்களிலிருந்து தேனை எடுக்கும் போது அவற்றின் காலில் ஒட்டிக் கொள்ளும் மகரந்தம், வெவ்வேறு பூக்களில் அவை மாறி மாறி அமரும் போது பரவுவதால் மகரந்தச் சேர்க்கை நடக்கிறது. இதனால் பூக்கள் பிஞ்சாகி, காயாகி,கனியாகின்றன.அதன் மூலம் விதைகள் பரவுகின்றன. தாவரங்கள் உருவாகின்றன. இதனால் விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்கள் போன்ற உயிரினங்களின் உணவுத் தேவை பூர்த்தியடைகிறது. தாவரங்களால் உலகில் உயிரினங்களின் வாழ்க்கை நிலைத்து நிற்கிறது. மனிதன் உண்ணும் உணவுத் தேவையில் 80% சதவீதத்தில் தேனீக்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் விவசாயத்தில் விளைச்சலை அதிகரிப்பதற்கு தேனீக்கள் மூலம் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. நீரை குடம், கேனில் எத்தனை நாள் பிடித்து வைத்து பயன்படுத்தலாம்? இல்லத்தரசிகளே கவனம்.. டிப்ஸ் இதோ.!

தேனீக்கள் இல்லையென்றால்..

தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதை நிறுத்திவிட்டால், உலகம் ஒரு பெரிய ஊட்டச்சத்து தட்டுப்பட்டை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது.இதனால் உயிரினங்களுக்கான உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படும், உயிர்வாழ முடியாது என்பதால், உணவுச் சங்கிலிகளும் பாதிக்கப்படும். விவசாயத்துறையிலும் விளைச்சல் இல்லாமல் பொருளாதார இழப்பைச் சந்திக்க நேரிடும்.அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்களாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன.

அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 ஆக அதிகரித்திருக்கிறது. சில நாடுகளில் வளர்ப்புத் தேனீக்களை வயல்வெளிகளில் சுற்ற விட்டு மகரந்தசேர்க்கை செய்ய வைக்கிறார்கள். தேனீக்களின் அழிவிற்கு செயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. மேலும் சுற்றுச்சூழல் மாற்றம், காடுகளின் பரப்பளவைக்குறைத்தல், காற்று மாசு உள்ளிட்ட காரணங்களாலும் தேனீக்கள் அழிகின்றன.