நவம்பர் 09, சென்னை (Kitchen Tips): ஸ்பானிஷ் ஆம்லெட் அல்லது ஸ்பானிஷ் டார்ட்டில்லா (Spanish Tortilla) என்பது ஸ்பெயினின் பாரம்பரிய உணவாகும். இது ஸ்பானிஷ் உணவு வகைகளில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். இது பொதுவாக முட்டை மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் ஆம்லெட் ஆகும். புரத சத்து நிறைந்த முட்டை, செரிமானத்திற்கு உதவும் முட்டைக்கோஸ் மற்றும் அனைவருக்கும் பிடித்த உருளைக்கிழங்கு சேர்த்து செய்த, இந்த ஆம்லெட் காலை சிற்றுண்டியாக சாப்பிட ஏதுவாகவும், எல்லா குழம்பு வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். அப்படிபட்ட ஸ்பானிஷ் ஆம்லெட் (Spanish Omelette) எப்படி செய்வது என்பதனை இந்த பதிவில் பார்ப்போம். Green Kurma Recipe: சப்பாத்திக்கு ஏற்ற ருசியான குருமா.. இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க..!
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
உருளைக்கிழங்கு - 1
ஒரு முட்டைக்கோஸ் - கால் பங்கு
பெரிய வெங்காயம் - 1
மல்லித் தழை - 2 கரண்டி
மிளகு தூள் - 1 கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
- முதலில் உருளைக்கிழங்கை தோல் நீக்கி கழுவி, சுமார் 20 நிமிடங்கள் நீரில் ஊறவிட்டு வடிகட்டவும். அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து, வேகுவதற்கு தேவையான அளவை விட கொஞ்சம் அதிகமாக எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.
- உருளைக்கிழங்கின் ஓரங்கள் பொரிந்து முக்கால் பதம் வெந்ததும்,வெங்காயம் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து கிளறவிட்டு, சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- மூடி போட்டு 5 நிமிடங்கள் வேக வைக்கவும். வெந்ததும்,வேறொரு பௌலுக்கு மாற்றவும். பின் ஒரு பாத்திரத்தில், 2 முட்டை உடைத்து ஊற்றி, அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக நுரை வரும் அளவிற்கு அடித்து கலக்கவும்.
- இந்த கலவையில் ஏற்கனவே வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு முட்டைகோஸ் வறுவல் மற்றும் மல்லித்தழை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 கரண்டி கடலை எண்ணெய் விட்டு, அதில் முட்டை கலவையை ஊற்றவும். குறைந்த தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்கவும்.
- பின்னர், கடாயின் மேல் ஒரு தட்டு வைத்து, கடாயை திருப்பி, முட்டையின் மேல் பக்கம் கீழ் வருமாறு செய்து, மீண்டும் முட்டையை கடாயில் சேர்த்து 3 நிமிடங்கள் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இது வெந்த பிறகு தட்டிற்கு மாற்றி பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான ஸ்பானிஷ் ஆம்லெட் ரெடி.