Suraikai Idly (Photo Credit : Youtube)

மே 30, சென்னை (Cooking Tips Tamil): கோடைகாலத்தில் விலை மலிவாக கிடைக்கும் சுரைக்காயில் நீர்ச்சத்து, இரும்பு சத்து, புரதம், வைட்டமின் பி, சி உள்ளிட்ட சத்துக்கள் கொட்டி கிடக்கின்றன. வெப்பநோய் மற்றும் உடல் சூட்டை தணிக்க, பித்தம் சமநிலை அடைய, நரம்புகளுக்கு புத்துணர்வை ஏற்படுத்த, உடலை வலுப்படுத்த சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இப்படி சத்துக்கள் நிறைந்த சுரைக்காயில் ஆரோக்கியமான இட்லி எப்படி செய்வது என இப்பதிவில் பார்க்கலாம். வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை.. 17 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ.! 

தேவையான பொருட்கள் :

சுரைக்காய் - ஒன்று,

பச்சை மிளகாய் - ஒன்று,

கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு,

இஞ்சி - சிறிய துண்டு,

ரவை - ஒரு கப்,

துருவிய தேங்காய் - ஒரு தேக்கரண்டி,

புளித்த மோர் - ஒரு கப்,

உப்பு - தேவைக்கேற்ப,

கடுகு - அரை ஸ்பூன்,

எண்ணெய் - ஒரு ஸ்பூன்,

கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்,

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன்.

செய்முறை :

முதலில் ஒரு முழு சுரைக்காயை எடுத்து அதன் தோலை நீக்கி நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு கப் சுரைக்காய்க்கு, ஒரு கப் ரவை என சேர்த்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, துருவிய இஞ்சி, தேங்காயுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இதன் பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் சுரைக்காயுடன் தாளிப்பை சேர்த்து புளித்த மோர் ஊற்றி கிளறி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

கடைசியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்த மாவை ஊற்றி 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவைமிகுந்த சுரைக்காய் இட்லி தயார்.