ஜூலை 11, சென்னை (Cooking Tips Tamil): வாரம் அல்லது மாதம் ஒருமுறை மீன் சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். மீனை எண்ணெயில் பொரித்து சாப்பிடாமல் மணக்க மணக்க கிராமத்து ஸ்டைலில் குழம்பு செய்து சாப்பிட்டால் இன்னும் தனி சுவையாக இருக்கும். அதேபோல மீனை சமைத்து சாப்பிடுவது உடலுக்கு நேரடியாக பல்வேறு நன்மைகளை வழங்கும் என்பது ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற அதிகாரப்பூர்வ தகவலாகும். அந்த வகையில் இன்று கிராமத்து ஸ்டைலில் சுவையான மீன் குழம்பு செய்வது எப்படி? என தெரிந்து கொள்ளுங்கள். ஹோட்டல் ஸ்டைலில் சுவையான பொங்கல் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
தேவையான பொருட்கள் :
மீன் - 1 கிலோ,
நல்லெண்ணெய் - தேவையான அளவு,
கடுகு - 2 கரண்டி,
சின்ன வெங்காயம் - 75 கிராம் (பொடி பொடியாக நறுக்கியது),
தக்காளி - 50 கிராம் (பொடிப்பொடியாக நறுக்கியது),
கறிவேப்பிலை - சிறிதளவு,
புளி - 1 எலுமிச்சை பழ அளவு,
உப்பு - தேவையான அளவு.
அரைப்பதற்கு :
தேங்காய் - 2 கப்,
சின்ன வெங்காயம் - 20.
வறுத்து அரைப்பதற்கு :
காய்ந்த மிளகாய் - 15,
மல்லி - 5 கரண்டி,
சீரகம் - 3 கரண்டி.
செய்முறை :
- முதலில் எடுத்துக்கொண்ட புளியை நீரில் ஊற வைத்து தனியாக சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும். வறுத்து அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிதமான தீயில் வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- வறுத்த பொருட்களுடன் தேங்காய், சின்ன வெங்காயம் சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் புளிச்சாரை கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பின் அரைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு, உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- குழம்பில் எண்ணெய் தனியாக பிரிந்து வரும்போது வெட்டி வைத்துள்ள மீனை சேர்த்து கொதி வந்ததும் இறக்கினால் சுவையான மீன் குழம்பு தயார்.