ஜனவரி 08, சென்னை (Festival News): மார்கழி மாதம் பெளர்ணமி (Margazhi Pournami) நன்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்து ஏராளமான பலன்களை தரும். பௌர்ணமி நாளன்று, சதுரகிரி மலை வழிபாடு, திருவண்ணாமலை கிரிவலம் போன்றவை சிறப்பானதாகும். மாதந்தோறும் பௌர்ணமியான முழுநிலவு வரும். ஆனால், சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி மற்றும் மார்கழி மாதத்தில் வரும் மார்கழிப் பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
மார்கழி பௌர்ணமி:
மார்கழி மாதம் வரும் பௌர்ணமியில் விரதமிருந்து, விளக்கு ஏற்றி வழிபட்டு வந்தால் பிரச்சனைகள் நீங்கும் உடல் நலம் ஆரோக்கியம் அடையும். நைவேத்தியமாக களியை படைத்து வழிபாடு செய்வது சிறப்பு. மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Raa Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; ராப்பத்து உற்சவ திருவிழா கொண்டாட்டம்.. தேதி, நேரம் குறித்த முழு விவரம் உள்ளே..!
பௌர்ணமி கிரிவலம்:
பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு, கிரிவலம் (Girivalam) சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் வருகின்றனர். திருவண்ணாமலை கிரிவலம் வருவது, உடலுக்கும் மனத்துக்கும் நலம் தரும். கிரிவலப் பாதையான 14 கிலோ மீட்டர் தூரத்தை பக்தர்கள் நடந்துதான் கடக்க வேண்டும். இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடியோ, சிவபுராணத்தை பாராயணம் செய்தபடியோ கிரிவலம் வரவேண்டும்.
மார்கழி மாத பௌர்ணமி நாள்:
மார்கழி மாதத்திற்கான பௌர்ணமி மார்கழி மாதம் 29ஆம் தேதி, ஜனவரி 13ஆம் தேதி வருகிறது. அன்று திங்கள் கிழமை அதிகாலை 4.49 மணியளவில் துவங்கி, ஜனவரி 14ஆம் தேதி அதிகாலை 4.07 மணிக்கு முடிவடைகிறது. எனவே, அன்றைய நாளில் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்தது. அன்று, அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது. அங்கு மலைமீது ஏற்றப்பட்ட தீபத்தில் இருந்து தயார் செய்யப்பட்ட மை பக்தர்களுக்கு வழங்கப்படும். மலையை சுற்றி கிரிவலம் வரும்போது அங்கிருக்கும் சாதுக்களுக்கு தானம் செய்வது சிறப்பாகும். அவர்களுக்கு அன்னதானம் செய்வதால், தானம் கொடுப்பதன் மூலம் நமது பாவங்கள் நீங்கும்.