ஆகஸ்ட் 11, சென்னை (Festival News): உலகைப் படைத்து உலக உயிர்களுக்கு எல்லாம் உயிர் கொடுத்து அதனை காக்கும் பணியில் இருக்கும் சிவன், பிரம்மா, விஷ்ணுவின் அவதாரங்கள் ஒவ்வொரு காலங்களிலும் கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் மகாவிஷ்ணுவின் எட்டாவது அவதாரமான கிருஷ்ணாவதாரம் இந்துக்களால் கோகுலாஷ்டமியாகவும், கிருஷ்ண ஜெயந்தியாகவும், ஜென்மாஷ்டமியாகவும் சிறப்பிக்கப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி (Krishna Jayanthi 2025) நாளில் கிருஷ்ணர் ஒவ்வொருவரின் வீட்டிற்கும் வந்து அருள் புரிவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தி எப்போது?
திருமணம் முடிந்தவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருந்து வழிபட கிருஷ்ணரே குழந்தையாக அவதரிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நன்னாளில் குழந்தைகளுக்கு கிருஷ்ணரின் குறும்புகளை கதைகளாக சொல்லலாம். கிருஷ்ண ஜெயந்தி மாலை நேர வழிபாடு சிறப்புகளை தரும். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராணங்கள் கூறுவதால், மாலை நேரத்தில் விரதம் இருந்து வழிபடுவது கூடுதல் நன்மையை தரும். 2025-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ண ஜெயந்தி ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி சனிக்கிழமையன்று வருகிறது. Aadi Month: குடும்பத்தில் துன்பங்கள் நீங்க குலதெய்வ வழிபாடு.. ஆடி மாதம் முடிவதற்குள் இந்த விஷயத்தை செய்யுங்கள்.!
கிருஷ்ணரை வழிபடும் முறை (Krishna Jayanthi Puja):
இந்த நாளில் கிருஷ்ணரை நினைத்து வழிபடுவது குடும்பத்தின் வளர்ச்சிக்கு உதவும். அன்றைய நாளில் அதிகாலையிலேயே வீட்டை சுத்தம் செய்து மாக்கோலம் இட்டு மாவிலை தோரணம் கட்டி பூக்கள் அலங்காரத்துடன் வழிபாடு செய்யலாம். வீட்டில் கிருஷ்ணர் சிலைக்கு பூ அலங்காரம் செய்து கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், பால் சார்ந்த பொருட்கள், சீடை, முறுக்கு, அதிரசம் போன்ற இனிப்புகளையும் படையலிட்டு வழிபாடு செய்யலாம்.
கிருஷ்ண ஜென்மாஷ்டமி வழிபாடு (Krishna Janmashtami):
இந்தியாவில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த முறை ஆடி மாதத்தின் இறுதியிலேயே கிருஷ்ண ஜென்மாஷ்டமி வருகிறது. ஆடி மாத இறுதிநாளில் சுதந்திர தினத்தின் அடுத்த நாளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட இருக்கிறது. தேவகி - வசுதேவருக்கு எட்டாவது குழந்தையாக அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நன்னாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணரை வழிபட நல்ல நேரம்:
ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி அதிகாலை 1:41 மணிக்கு தொடங்கி அன்றைய நாளின் இரவில் 11:13 வரை அஷ்டமி திதி உள்ளது. கிருஷ்ணரை வழிபட உகந்த நேரமாக கார்த்திகை நட்சத்திரத்துடன் இணைந்து கிருஷ்ண ஜெயந்தி விழா நடப்பாண்டில் வருவது தனி சிறப்பை தருகிறது. கிருஷ்ணா ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு பூஜை செய்து வழிபடும்போது மந்திரங்களை கூறி வழிபட வேண்டும்.
- கிருஷ்ணரை வழிபட உகந்த நேரம் : மாலை 03:01 முதல் 05:45
- காலை நல்ல நேரம்: காலை 07:45 முதல் 08:45
- மாலை நல்ல நேரம்: 04:45 முதல் 05:45
- கௌரி நல்ல நேரம் காலை: 10:45 முதல் 11:45
- கௌரி நல்ல நேரம் மாலை: 09:30 முதல் 10:30
- எமகண்டம்: மதியம் 01:30 முதல் 03:00 வரை
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மந்திரம் (Lord Krishna Mantra):
"ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே"
இந்த 16 வார்த்தைகள் அடங்கிய மகாமந்திரத்தை 108 முறை சொல்லி கிருஷ்ணருக்கு விரதம் இருந்து படையல் இட்டு வழிபடுவது நன்மையை தரும். குழந்தைகளுக்கு கிருஷ்ணர் - ராதை போலவும் வேடமிட்டு வழிபாடு செய்யலாம்.