
ஜூன் 28, சென்னை (Cooking Tips Tamil): சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் மீன் பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்றாகும். பலரும் மீனை குழம்பு வைத்தோ அல்லது வறுத்தோ உண்டே பழக்கம். ஆனால் சிறியதாக இருக்கும் நெத்திலி மீனை வைத்து தொக்கு செய்தால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் உங்கள் சமையலுக்கு அடிமையாகிவிடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?. இன்று நெத்திலி மீனை வைத்து தொக்கு எப்படி செய்வது என காணலாம். Instagram Reels: ரீல்ஸ் அதிகம் பார்க்குறீங்களா?.. இன்ஸ்டா பிரியர்களுக்கு பேராபத்து.!
செய்யத்தேவையான பொருட்கள் :
நெத்திலி மீன் - 300 கிராம்,
சின்ன வெங்காயம் - 20,
பூண்டு - 12 பற்கள்,
மிளகு - 1 தேக்கரண்டி,
பச்சை மிளகாய் - 2,
தக்காளி - 2,
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி,
மல்லித்தூள்- 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி,
வெந்தயம் - 1 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
புளிச்சாறு - தேவையான அளவு,
கருவேப்பிலை - 1 கைப்பிடி,
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் சின்ன வெங்காயம், தக்காளி பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம், தக்காளி, மிளகு, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனியே எடுத்து வைக்கவும்
இதன்பின் நெத்திலி மீனை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்ததாக வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி வெந்தயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து வதக்கவும்
பின்பு மிளகாய் தூள். மஞ்சள் தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறி எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
அதில் புளிச்சாறு ஊற்றி கெட்டியாக வரும்போது நெத்திலி மீனை சேர்த்து பிரட்டி 8 நிமிடம் வரை மூடி வைத்து வேக விடவும். இறுதியாக எண்ணெய் ஊற்றி 5 நிமிடம் வேகவைத்து, கருவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான நெத்திலி மீன் தொக்கு தயாராகிவிடும்.