டிசம்பர் 26, சென்னை (Chennai News): வடகிழக்கு பருவமழை தொடங்கி, தற்போது சில வாரங்களில் தனது இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. இதனால் பருவகால நோய்களான டெங்கு உட்பட சில காய்ச்சல்களும் தமிழ்நாட்டில் பரவலாக அதிகரித்து இருக்கிறது. மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதன் காரணமாக, உயிர்ப்பலி எண்ணிக்கைகள் பெரிதளவு இல்லாமல் இருக்கிறது. அதேபோல, லேசான காய்ச்சல், அதிக உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனையில் உடல்பரிசோதனை செய்து மருத்துவரின் அறிவுரையை ஏற்று நடக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செரிமான மண்டல பாக்டீரியா:
இதனிடையே, சமீபத்தில் பெய்த மழைப்பொழிவு காரணமாக சென்னை உட்பட சில நகரங்களில் மக்களுக்கு கடந்த சில நாட்களாகவே உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் அதிகரித்து இருக்கின்றன. மருத்துவமனைக்கு உடல்நலக்குறைவு காரணமாக வரும் நபர்களில் 40% நபர்களுக்கு இவ்வாறான பாதிப்புகள் இருக்கின்றன. இதில், இ-கோலி என அறியப்படும் தீங்கு விளைவிக்கும் செரிமான மண்டல பாக்டீரியா தொற்று காரணமாக, உடல்நலக்குறைவுகள் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. Health Tips: நுரையீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க விரும்புகிறீர்களா? அசத்தல் டிப்ஸ் இதோ.. உடனே சாப்பிடுங்க.!
இ-கோலி நோய் பரவக் காரணங்கள்:
மருத்துவ நிலைகளில் எஸ்கோரிசியா கோலி (Escherichia Coli) என அழைக்கப்படும் இ-கோலி, மனிதர்கள் மற்றும் பாலூட்டிகளின் குடலில் வளரும் பாக்டீரியா ஆகும். இதில் பல வகை இருக்கின்றன. பல பாக்டீரியா உடலுக்கு தீங்கை ஏற்படுத்தாது எனினும், சில பாக்டீரியா தீவிர உடல்நல பிரச்சனைகளை உண்டாக்கும். சுத்தமில்லாத இறைச்சி, காய்கறிகள், பழங்கள், குடிநீர், பால் போன்றவை மூலமாக இவை மனித உடலுக்குள் செல்லும். மேலும், முறையாக சுத்தம் செய்யப்படாமல், வேகவைக்காமல் மேற்கூறிய பொருட்களை உணவாக எடுக்கும்போது, அவை பாதிப்புகளை உண்டாக்கும்.
அறிகுறிகள்:
இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி, கடும் வயிற்றுவலி, காய்ச்சல் ஏற்படும். இதற்காக உடனடி சிகிச்சை பெறாத பட்சத்தில், சிறுநீரக செயலிழப்புக்கும் வழிவகை செய்யும். இந்நோயை மலப்பரிசோதனை, இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை வாயிலாக உறுதி செய்ய இயலும். நீர்சத்துக்களை தக்க வைக்கும் சிகிச்சை முறை, ஆண்டிபயாடிக் சிகிச்சை வாயிலாக உடல் நலம் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். மழை, வெள்ளம் போன்ற காலங்களில் காலரா, டைபாயிடு, மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல் போன்றவை அதிகம் பரவும். இதனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பருவமழை, குளிர்காலங்களில் நீரை சுடவைத்து குடிப்பது நல்லது.
குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.