Vinayagar Chaturthi 2025 (Photo Credit : @Team LatestLY)

ஆகஸ்ட் 17, சென்னை (Festival News): இந்து தெய்வங்களில் முழுமுதற்கடவுள் என போற்றப்படுபவர் விநாயகர். அவர் பூவுலகில் அவதரித்த நாள் விநாயகர் சதுர்த்தியாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஆவணி மாதத்தின் வளர்பிறையில் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. விநாயகர் அவதரித்த சதுர்த்தி திதி ஒவ்வொரு மாதத்திலும் சதுர்த்தி தினமாகவும் சிறப்பிக்கப்படுகிறது. இது விநாயகருக்கான முக்கிய வழிபாட்டு நாளாகவும் மக்களால் கொண்டாடப்படுகிறது.

சங்கடங்களை தீர்க்கும் விநாயகர் :

விநாயகரின் அருளைப் பெற பக்தர்கள் விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவது நன்மையை தரும். சதுர்த்தி துன்பங்களை நீக்கும் ஆற்றல் படைத்தது. அதனாலயே சங்கடகர சதுர்த்தியில் பக்தர்கள் விநாயகரை மனம் உருகி வழிபடுகின்றனர். ஆவணி மாதத்தின் வளர்பிறையில் சதுர்த்திக்கு முன்பு வரும் சங்கடகர சதுர்த்தி மகா சங்கடஹர சதுர்த்தி ஆகும். மகா சங்கடஹர சதுர்த்தியில் விநாயகரை வேண்டி வழிபடுவதால் வாழ்வில் வெகுநாட்களாக இருந்துவரும் சங்கடங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்வுடன் வாழ இயலும். Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. கொழுக்கட்டை செய்வது எப்படி? விவரம் உள்ளே..! 

விநாயகர் சதுர்த்தி 2025 எப்போது?

துன்பங்கள் நீங்கவும், தடைகள் விலகவும் சதுர்த்தி வழிபாடு உதவுகிறது. 2025-ஆம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி (Vinayagar Chaturthi 2025) ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. ஞானத்தின் ஓம்கார வடிவமாக திகழும் விநாயகப் பெருமானின் சதுர்த்தி இம்முறை புத்திகாரகன் என அழைக்கப்படும் புதன்கிழமையில் வருவது விசேஷமானதாக கருதப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி நண்பகல் 02:22 மணி முதல் ஆகஸ்ட் 27-ஆம் தேதி மாலை 03:52 மணி வரை சதுர்த்தி திதி உள்ளது. அதன் பின் பஞ்சமி திதி தொடங்குவதால் முன்னதாகவே விநாயக சதுர்த்தி வழிபாடு செய்து விட வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி நல்ல நேரம் :

விநாயகர் சதுர்த்தியில் நல்ல நேரம் (Vinayagar Chaturthi Puja Timings) காலை 9:15 மணி முதல் 10:15 மணிவரை இருக்கிறது. எமகண்டம் காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை இருப்பதாலும், மதியம் 12:00 மணி முதல் 1:30 வரை ராகு இருப்பதாலும் அந்த நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் விநாயகர் பூஜை செய்யலாம். அதன்படி காலை 09:01 முதல் 11:59 வரையும், நண்பகல் 01:31 முதல் மாலை 03:52 வரை விநாயகரை வழிபட உகந்த நேரமாக கருதப்படுகிறது. மாலை 03:52 க்கு மேல் பஞ்சமி திதி தொடங்குவதால் அதற்கு முன் இருக்கும் சதுர்த்தி திதியில் விநாயகரை வணங்கி மகிழலாம்.

விநாயகர் வழிபாடு :

விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலையில் அஸ்தம் நட்சத்திரமும், சித்திரை நட்சத்திரமும் இருக்கிறது. காயத்ரி தேவி, சக்கரத்தாழ்வார் ஆகியோரின் ஞானம், வெற்றி, ஆன்மீக பாதுகாப்பு, தெய்வீக பலம் கிடைக்க விநாயகப் பெருமான் வழிபாடு மிக விசேஷமானது ஆகும். தடைகளை அகற்றி புதிய தொழில் தொடங்க நினைப்போர் இந்த நாளில் வழிபடுவது வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும். விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi Celebration) நன்னாளில் களிமண் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலையை வைத்து விநாயகருக்கு விருப்பமான கொழுக்கட்டை, லட்டு போன்றவை படைத்து வழிபடுவது நல்லது.

விநாயகர் மந்திரம் :

அருகம்புல் மாலை, எருக்கம் பூ மாலை சாற்றி வழிபடுவது தீராத துன்பங்களை வாழ்வில் இருந்து விரட்டும். "கணபதியே நமஹ" என்ற மந்திரத்தை 108 முறை (Vinayagar Mantra) சொல்லி வழிபடுவது விநாயகரின் அருளை நேரடியாக கிடைக்க வழிவகை செய்யும்.