
மார்ச் 10, சென்னை (Health Tips): நவீன உலகில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலான மக்கள் இதய நோய்களுக்கு ஆளாகின்றனர். சமீப காலமாக மாரடைப்பு மூலமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் மாரடைப்பால் அதிகம் உயிரிழக்கின்றனர். மாரடைப்பு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே, மாரடைப்பு வருபவருக்கான உடலில் அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. அவற்றை சரியான நேரத்தில் அடையாளம் காண்பதன் மூலம், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும். மாரடைப்பு (Heart Attack) வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு என்னென்ன அறிகுறிகள் தோன்றும், அதனை எவ்வாறு தடுப்பது என்பதை இப்பதிவில் பார்ப்போம். Red Banana Benefits: செவ்வாழைப்பழத்தில் இவ்வுளவு நன்மைகளா? ரத்த சோகை முதல் சிகிரெட் பாதிப்பு வரை.. அசத்தல் தகவல் இதோ.!
நெஞ்சு வலி:
மாரடைப்பு வருவதற்கு முன்பு, நோயாளிக்கு நெஞ்சு வலி ஏற்படக்கூடும். இந்நிலையில் நோயாளி மார்பைச் சுற்றி அழுத்தத்தை உணரலாம். சில நேரங்களில் கைகள், தோள்கள் மற்றும் தாடையிலும் வலி இருக்கலாம். மார்பு, தோள்பட்டை மற்றும் தாடையில் வலி இருந்தால், அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மூச்சுத் திணறல்:
சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். லேசான வேலை செய்தால் கூட மிகவும் சோர்வடைந்தால் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். உடலில் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
உடல் சோர்வு:
மாரடைப்பு வருவதற்கு முன்பு, உடலில் சோர்வு மற்றும் பலவீனத்தை உணரலாம். எந்த வேலையும் செய்யாமல் நீங்கள் எப்போதும் சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகி உடலை பரிசோதித்துக் கொள்ளவும்.
தலைச்சுற்றல்:
மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நோயாளிக்கு மீண்டும் மீண்டும் தலைச்சுற்றல் ஏற்படும். சில சமயங்களில், மயக்கம் வருவது போலவும் உணரலாம். மூச்சுத் திணறல், தலைவலி மற்றும் இரத்த ஓட்டம் குறைவதால் இப்படி ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதிக்க வேண்டும்.
மாரடைப்பை தவிர்க்கும் வழிமுறைகள் :
ஆரோக்கியமான உணவு முறை:
சிவப்பு இறைச்சி, வெண்ணெய், மற்றும் பால்பொருட்களில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளைத் தவிர்க்கவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மற்றும் பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளவும். உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
உடற்பயிற்சி:
வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் நடைபயிற்சி, ஜாகிங், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். உடல் எடையை ஆரோக்கியமான முறையில் வைத்திருக்கவும். உடல் பருமன் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். மேலும், புகைப்பழக்கம் இரத்தக் குழாய்களை சேதப்படுத்தி மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை தவிர்க்கவும். மிக முக்கியமாக மனஅழுத்தம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். யோகா, தியானம் ஆகியவற்றில் கவனம் செலுத்தவும்.