செப்டம்பர் 16, சென்னை (Chennai News): இந்தியா முழுவதும் தெருநாய் தாக்குதல் என்பது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களும் ஒரு சில நேரம் சாலையில் நடந்து செல்வோரை மூர்க்கத்தனமாக தாக்கிய சம்பவமும் நடந்துள்ளது. இதனால் பலரும் நாய் கடிபட்டு அவதிப்பட்டு உயிர் பிழைத்தாலும், ஒரு சில நேரம் ரேபிஸ் போன்ற வைரஸ் தொற்று கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழப்பும் நடக்கின்றன. இதனிடையே டெல்லி உச்சநீதிமன்றம் தெருநாய்களை பிடித்து அடைக்க வேண்டும் எனவும் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து பின் ரத்து செய்தது.
நாய் கடியால் அதிகரிக்கும் மரணம் :
தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த 8 மாதங்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் நாய் கடியால் (Dog Bite) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாய்களுக்கு நோய் தடுப்பூசி போன்றவற்றை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாய் கடித்த பின்னர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை தற்போது வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. Neeya Naana: உசுரே போச்சு.. கதறியழுத தந்தை.. நாய்களால் மட்டுமா விபத்து? குழந்தைகளாலும் தான்.. நாய் பிரியர்களால் வெடித்த மோதல்.!
நாய் கடித்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?
- நாய் கடித்த உடன் அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
- நாய் கடியால் பாதிக்கப்பட்ட நபர் அனைத்து தவணை ரேபிஸ் தடுப்பூசிகளையும் செலுத்துதல் அவசியம்.
- நாய் கடித்த இடத்தில் உடனடியாக சோப்பு போட்டு சுத்தமான முறையில் குறைந்தது 15 நிமிடம் கழுவ வேண்டும்.
- கிருமி நாசினியை பயன்படுத்தி நாய் கடித்த இடத்தை கழுவுதல் அவசியம்.
- நாய் கடித்த இடத்தில மிளகாய் அல்லது கடுகு எண்ணெய் போன்ற எதையும் பயன்படுத்த கூடாது.
குறிப்பு : நாய் வளர்ப்பவர்கள் தங்களது செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தெரு நாய்களுக்கு உணவு அளிக்க விரும்பும் நபர்கள் நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து ஆலோசித்து அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களை உபயோகித்தல் அவசியம்.