நவம்பர் 25, சென்னை (Cooking Tips Tamil): காலையில் எழுந்தவுடன் என்ன சமைக்கலாம்? என யோசிப்பதே பலரது வீட்டிலும் தலைவலியாக இருக்கும். சுவையாகவும், விரைவாகவும் செய்து முடிக்கக் கூடிய ரெசிபிக்கள் என்பதே தாய்மார்களுக்கும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் முதல் விருப்பமாக இருக்கும். பொதுவாக மாவு இருந்தால் இட்லி, தோசை போன்றவை எளிதில் செய்து விடலாம். ஆனால் மாவு இல்லாத நேரங்களில் சில நிமிடங்களில் தயார் செய்யக் கூடிய இடியாப்பம் சிறந்த மற்றும் ஆரோக்கியமான காலை உணவாக இருக்கும். இடியாப்பம் செய்தால் அதற்கு ஏற்ற சைட் டிஷ் செய்வதும் மிக முக்கியம். குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் தேங்காய்ப்பால் கொடுத்தால் சிலருக்கு அசௌகரியம் ஏற்படக்கூடும். அதனால் காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் வெள்ளை சால்னா சிறந்த மாற்றாக இருக்கும். இந்த செய்தித்தொகுப்பில் இடியாப்பத்துக்கு ஏற்ற வெள்ளை சால்னா செய்வது எப்படி என காணலாம். Prawn Thokku: சண்டே ஸ்பெஷல்.. நாவூற வைக்கும் இறால் தொக்கு செய்வது எப்படி?.. வீட்டிலேயே எளிமையாக செய்து அசத்துங்கள்.!
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு:
தேங்காய் - 5 பற்கள்
முந்திரி - 7
சின்ன வெங்காயம் - 1
இஞ்சி - சுண்டு விரல் அளவு
பூண்டு - 5 பற்கள்
பட்டை, இலவங்கம் - சிறிதளவு
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 2
சமைப்பதற்கு:
வெங்காயம் - 4
தக்காளி - 2
கேரட் - 1
பீன்ஸ் - 4
உருளை (சிறியது) - 1
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
- முதலில் வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட், உருளை, பீன்ஸை கிரேவிக்கு ஏற்றது போல நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பின் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அடுத்ததாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருஞ்சீரகம், ஏலக்காய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நன்கு பொன்னிறமானதும், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், உருளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். காய்கறிகள் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் விரைவில் செய்யக்கூடிய சுவையான வெள்ளை சால்னா தயார்.
- இந்த காய்கறி வெள்ளை சால்னா சப்பாத்தி, தோசை, இடியப்பம், பரோட்டா உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்ப இருக்கும்.