Why Non Veg is Avoided for Purattasi (Photo Credit : @Team LatestLY)

செப்டம்பர் 20, சென்னை (Festival News): தமிழ் மாதத்தில் 12 மாதங்கள் இருந்தாலும் புரட்டாசி மாதம் முன்னோர்களால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புரட்டாசியில் அசைவம் கூடாது என்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் புரட்டாசி மாதம் அசைவ பிரியர்களுக்கு ஏமாற்றத்தை தரும் மாதமாகவும் இருக்கிறது. செப்டம்பர் மாதத்தின் மத்தியில் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நீடிக்கும் புரட்டாசியில் விரதமிருந்து பெருமாளை வணங்குவது பாரம்பரியமாகும்.

புரட்டாசியில் அசைவம் கூடாது ஆன்மீக காரணங்கள் :

இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவது, புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றை நிறுத்த வேண்டும் என்பது பெரியோர்களின் வாக்கு. இந்து சமய ஜோதிடத்தின்படி ஆறாவது ராசியான கன்னி ராசிக்குரிய மாதமாக புரட்டாசி இருக்கிறது. இதன் அதிபதி புதன். புதனுக்குரிய தேவதை மகாவிஷ்ணு ஆவார். சைவ தேவதையான புதன் அந்த மாதம் முழுவதும் சைவ உணவுடன் பெருமாள் வழிபாட்டில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் மழை தொடங்கும் என்பதால் வெப்பம், காற்று, குறைந்த மழை ஆகியவை நீடிக்கும். இதனால் பல மாதங்களாக தொடர்ந்து உஷ்னமான நிலையில் இருந்து வந்த பூமி சற்று குளிர்ந்த நிலைக்கு மாறும். Purattasi Fasting: புரட்டாசி மாத விரதங்களும், பலன்களும்.. பெருமாளின் அருளை அள்ளித்தரும் வழிபாட்டு முறைகள்.! 

ஏன் அசைவம் தவிர்க்க வேண்டும்?

இந்த நேரத்தில் சூடு நிறைந்த மாமிசத்தை சாப்பிட்டால் அது உடல் உபாதைக்கு வழிவகை செய்யும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை, தொற்று நோய்கள், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இதனால் அசைவ உணவை புரட்டாசி மாதத்தில் தவிர்க்க வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெருமாள் கோவிலில் வழங்கப்படும் துளசி தீர்த்தம் ஆற்றல் மிக்கதாகவும், பிற உடல்நல பிரச்சினைகளை குறைக்கவும் பயன்படுகிறது. இதனால் புரட்டாசி மாதத்தில் பெருமாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற பழக்கமும் இருந்துள்ளது. துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பூச்சி தொற்றை தடுக்கும். உடல் நலம் முன்னேற்றம் அடையும். மழைக் காலங்களில் ஏற்படும் காலரா போன்ற மிகப்பெரிய நோய் தொற்றுகளும் நம்மை அண்டாமல் பாதுகாக்கும்.