Ennore Beach Death (Photo Credit : Youtube)

அக்டோபர் 31, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள எண்ணூர், பெரியகுப்பம் கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த 4 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் உள்ள கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சார்ந்த 18 வயதுடைய மாணவி மற்றும் கும்மிடிபூண்டியை சேர்ந்த 3 பேர் என மொத்தமாக நால்வர் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த எண்ணூர் காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரையில் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழந்தார்களா?

உயிரிழந்த 4 பேரின் சடலமும் அடுத்தடுத்து கரையோரம் ஒதுங்கியதால் மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, நேரில் சென்று அதிகாரிகள் 4 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் பவானி, தேவகி செல்வம், கல்லூரி மாணவி ஷாலினி (வயது 18) மற்றும் காயத்ரி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் கடற்கரையில் குளிக்கும் போது அலையில் சிக்கி உயிரிழந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாளைய வானிலை: உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மழை கொட்டும்.!

உடலில் சிராய்ப்பு காயங்கள்:

இவர்கள் சடலம் கரை ஒதுங்கிய பகுதி பாறைகள் நிறைந்தது என்பதால் உடலில் சிராய்ப்பு காயங்களும் இருக்கின்றன. முதலில் தனியார் கல்லூரி மாணவி கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில், மற்ற மூவரும் அவரை காப்பாற்ற சென்று உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.