ஆகஸ்ட் 16, திண்டுக்கல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகர், காட்டாஸ்பத்திரி பகுதியில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் வேலைக்காக காத்திருப்பர். இவர்களை கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த பணியாளர்கள் தினக்கூலியாக அழைத்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று காரில் வந்த இளைஞர், கட்டுமான வேலைக்கு ஆட்கள் வேண்டும். தன்னிடம் கொத்தனார் இருப்பதால், ஒரேயொரு சித்தாள் மட்டும் வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பிய நடுத்தர வயது பெண்மணி காரில் ஏறிச் சென்றுள்ளார். நடுவழியில் காரை நிறுத்திய இளைஞர், பெண்ணை கத்தியை காண்பித்து மிரட்டி நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. Dindigul I Periyasamy: அடிப்படை தொண்டரில் இருந்து அமைச்சர்.. யார் இந்த திண்டுக்கல் ஐ. பெரியசாமி.!
செல்போனில் அதிர்ச்சி காட்சிகள்:
அப்போது, காரில் வந்து சென்ற நபரின் விபரங்களை அதிகாரிகள் சேகரித்தனர். கார் பல இடங்களில் சுற்றி வருவது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து பயணத்திலேயே இருந்ததால் குற்றவாளி பயணிக்கும் காரை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. இந்த கார் மீண்டும் திண்டுக்கல் வருவது உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் அதிரடியாக காரை தடுத்து நிறுத்தி இளைஞரை கைது செய்தனர். அவரிடம் முதற்கட்டமாக விசாரணை நடத்தியபோது, திருட்டு செயலில் ஈடுபடும் இளைஞர் என்பது உறுதியானது. இவர் வேலைக்குச் செல்லும் பெண்களை குறிவைத்து காரில் அழைத்துச் சென்று நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது தெரியவந்தது. 40 வயதுக்கும் அதிகமான பெண்கள் இவரின் டார்கெட் ஆவார். கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு (28), கேரளாவில் மூணாறு, இடுக்கி பகுதியில் வேலைக்கு சென்ற பெண்களை ஏமாற்றி அழைத்துச்சென்று கொள்ளை செயலில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அங்கு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர், தமிழகத்தை டார்கெட் செய்ய தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தேனியில் திருட்டுசெயலில் ஈடுபட்டவர், திண்டுக்கல்லில் அதனை தொடர்ந்து வந்துள்ளார். மேலும், சஞ்சுவின் செல்போனை ஆய்வு செய்தபோது, 50 க்கும் மேற்பட்ட பெண்களை இளைஞர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி காட்சிகளும் இருந்துள்ளன. சஞ்சுவை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், இளைஞரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.