ஆகஸ்ட் 16, திண்டுக்கல் (Dindigul News): திமுகவின் துணைப்பொதுச்செயலாளர்களில் ஒருவரும், மூத்த தலைவருமாக கவனிக்கப்படும் திண்டுக்கல் ஐ. பெரியசாமியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 2006 - 2011 காலகட்டங்களில் திமுகவில் அமைச்சர் பொறுப்பில் இருந்த பெரியசாமி, ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியின் பெயரில் முறைகேடாக நிலத்தை பதிவு செய்து கொடுத்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி அளவில் சொத்து சேர்ந்ததாகவும் புகார் எழுந்தது. இந்த விஷயம் குறித்து வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ஒருகட்டமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தியுள்ள சோதனை தமிழக அளவில் இன்று கவனத்தை பெற்றுள்ளது. சிஆர்பிஎப் படை வீரர்கள் பாதுகாப்புடன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடக்கிறது. அமைச்சரின் மகன் & பழனி எம்.எல்.ஏ செந்தில் குமார் வீடு, அமைச்சரின் மகள் இந்திராணி வீடு, ஓட்டப்பட்டி ஜவுளி தொழிற்சாலை அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் முடிவிலேயே அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்கள், சோதனைக்கான காரணம் குறித்து அறிவிக்கப்படும். Minister I Periyasamy ED Raid: திமுக அமைச்சர் ஐ. பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. அரசியலில் காலையிலேயே பரபரப்பு.!
திண்டுக்கல் ஐ. பெரியசாமி:
பள்ளிப்பருவத்தில் இருந்து திமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய ஐ. பெரியசாமி, 1973ம் ஆண்டு நடைபெற்ற திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆரை வத்தலகுண்டுவில் நுழைய விடமாட்டேன் என சூளுரைத்து எதிர்ப்பு காண்பித்தார். இடைத்தேர்தலில் திமுகவுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இடைத்தேர்தலுக்கு பின்னர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி என அடையாளம் காணப்பட்டவருக்கு முதலில் வத்தலகுண்டு ஒன்றிய தலைவரானார். பின் 1989ல் ஆத்தூரில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். எம்.எல்.ஏ பொறுப்புக்குப்பின் திமுக மாவட்ட செயலாளர் தேர்தலிலும் வெற்றி அடைந்தார். சிறிய தொண்டராக இருந்தவர் படிப்படியாக மக்கள் மனதில் இடம்பிடித்தார். 1996 தேர்தலில் வெற்றிக்குப்பின் முதல் முறை அமைச்சராக பொறுப்பேற்றவர், மு.க. அழகிரியின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டார். 2009ல் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நெருக்கம் காண்பித்தார். எப்போதும் உண்மையான திமுக விசுவாசியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவர் திமுகவில் அடிப்படை உறுப்பினராக தனது வாழ்க்கையை தொடங்கி, இன்று பல துணைப்பொதுச்செயலாளர்களில் கவனிக்கத்தக்க அடையாளத்தையும் பெற்றுள்ளார்.