ஜூன் 24, மகாராஷ்டிரா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சாங்லியை சேர்ந்தவர் தொண்டிராம் போஸ்லே. பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இவரது மகள் சாதனா 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.60% மதிப்பெண் பெற்றதால் அவரை மருத்துவராக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தந்தை இருந்து வந்துள்ளார். அறுவை சிகிச்சைக்காக சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொலை செய்வதாக மிரட்டி கொடூரம்.!

மகளை குழவியால் தாக்கிய தந்தை :

இதன் காரணமாக மகள் 12 ஆம் வகுப்பு படிக்கும்போதே மருத்துவ படிப்புகளுக்கான நீட் இளநிலை தேர்வுக்கும் தயாராகுமாறு கூறியுள்ளார். இதனால் மாணவியும் நீட் தேர்வுக்கு தயாரான நிலையில், பள்ளியில் நடத்தப்பட்ட நீட் பயிற்சி தேர்வில் தந்தை எதிர்பார்த்த மதிப்பெண் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மகளின் செயலால் கோபமடைந்தவர் கடந்த சனிக்கிழமையன்று அவரை கடுமையாக திட்டியுள்ளார். இதனை தொடர்ந்து மகளும் எதிர்த்து பேசியதால் ஆவேசமடைந்தவர், ஆட்டுக்கால் குழவியால் மகளை கடுமையாக தாக்கியுள்ளார்.

பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை :

அவரது மனைவி மற்றும் மகன் தடுத்த நிலையிலும் மகளை தாக்கியவர், அடுத்த நாள் எதுவும் நடக்காதது போல பள்ளியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின் வீட்டிற்கு வந்தவர் மகள் மயக்கமடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் முன்னதாகவே உயிரிழந்தது உறுதி செய்யப்படவே, உடலில் உள்ள காயங்கள் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

போலீசில் புகாரளித்த தாய் :

மகளின் மரண செய்திகேட்டு மனமுடைந்த சிறுமியின் தாய், தனது கணவர் தான் மகளின் மரணத்திற்கு காரணமென காவல்துறையில் புகாரளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் தொண்டிராம் போஸ்லேவை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையும் நடந்து வருகிறது.