ஜூலை 13, ராணிப்பேட்டை (Ranipet News): ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேட்டு குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறார்கள் புவனேஸ்வரன் (வயது 7), சுஜன் (வயது 7), மோனி (வயது 9). இவர்கள் மூவரும் நண்பர்கள் ஆவார்கள். சிறார்கள் இன்று விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். ஒருகட்டத்திற்கு மேல் மூச்சு விட சிரமம் ஏற்படவே, தங்களை காப்பாற்றுமாறு அபய குரல் எழுப்பியுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறார்கள் :
இதனிடையே சிறார்களை நீண்ட நேரம் காணாததால் அவர்களின் பெற்றோர் பல இடங்களில் தேடியலைந்த நிலையில், குழந்தைகளின் உடைமைகள் குளத்திற்கு அருகே இருந்துள்ளன. இதனால் சிறார்கள் குளத்தில் மூழ்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது உயிரிழந்த சிறார்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர்: குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி.. பெற்றோருக்கு தெரியாமல் குளிக்க சென்று சோகம்.!
போலீசார் விசாரணை :
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பானாவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் மீண்டும் சோகம் :
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் திருவேங்கைப்புடையான்பட்டியில் நேற்று 3 சிறுவர்கள் பெற்றோருக்கு தெரியாமல் குளத்தில் குளிக்க சென்று உயிரிழந்த நிலையில், மீண்டும் தற்போது அதேபோன்ற சோகம் நிகழ்ந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் விடுமுறை காலங்களில் தங்களது குழந்தைகளை கவனத்துடன் பார்த்துக்கொள்ளுமாறும், அவர்கள் எங்கே செல்கிறார்கள்? என்று கண்காணிக்குமாறும் காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.