ஜூலை 12, தஞ்சாவூர் (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் திருவேங்கைப்புடையான்பட்டி கிராமத்தில் வசித்து வந்த சிறுவர்கள் மாதவன் (வயது 10), பாலமுருகன் (வயது 10), ஜஸ்வந்த் (வயது 8). இவர்கள் மூவரும் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 3 மற்றும் 5 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளனர். சிறுவர்கள் நேற்று பள்ளிக்கு சென்ற நிலையில் வீட்டிற்கு திரும்பாமல் பெற்றோருக்கு தெரியாமல் கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர். மூவரும் ஒன்றாக குளித்த போது குளத்தின் ஆழமான பகுதிக்கு செல்லவே, நீச்சல் தெரியாமல் தத்தளித்து காப்பாற்றுமாறு கதறியுள்ளனர். Gold Rate Today: தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் வெள்ளி.. வார இறுதியில் கிடுகிடு உயர்வு.!
மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் :
இதனிடையே பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் மருதகுடி கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்ற நிலையில், சிறுவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் உடனடியாக அவர்களை பல இடங்களிலும் தேடிப்பார்த்துள்ளனர். பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் வீடு திரும்பாததால் உறவினர்களிடமும் கூறி அதே பகுதியில் உள்ள குளத்திற்கு சென்ற போது மாணவர்களின் உடமைகள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் குளத்தில் தேடிய நிலையில் மாதவன், ஜஸ்வந்த், பாலமுருகன் மூவரையும் மயங்கிய நிலையில் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
போலீசார் விசாரணை :
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவர்கள் மூவரும் உயிரிழந்ததை உறுதி செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வல்லம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவர்களின் உடலை மீது பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.