Perambalur Rains Cloud File Pic (Photo Credit: LatestLY)

செப்டம்பர் 01, சென்னை (Chennai News): மத்திய-மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, நேற்று 05:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 08:30 மணியளவில் ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவிலும், கலிங்கப்பட்டினத்திற்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 80 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூர் பகுதிக்கு தெற்கு-தென்மேற்கு திசையில் 150 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டது.

நேற்று கரையை கடந்த முதல் புயல்:

மேலும், வடக்கு-வடமேற்கு திசையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி விசாகப்பட்டினம்- கோபால்பூர் இடையே கலிங்கப்பட்டினத்திற்கு அருகில் கரையை கடந்தது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் ஆறாம் தேதி வரையில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகத்தில் தரைக்காற்று 40 கிலோ மீட்டர் வேகம் வரை வீசலாம். தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என நாளைய வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. Car Accident: 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் விபத்து; வாலிபர் பலி.. இருவர் மீது வழக்குப்பதிவு..!

இந்திய வானிலை ஆய்வு மையம்:

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, "செப்டம்பர் மாதம் முதல் வங்கக்கடல் பகுதியில் ஒவ்வொரு வாரமும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும். பல வடஇந்திய மாநிலங்கள் பெருமழையை எதிர்கொள்ளலும். தென்னிந்திய மாநிலங்களில் மழைப்பொழிவு என்பது இயல்பை விட குறைவாகவே இருக்கும். உத்திரபிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மழையால் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:

வங்கக்கடலில் புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதை அடுத்து புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் உட்பட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டில் இன்று பரவலான இடங்களில் மழைக்கான வாய்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலை 10 மணிவரையில் கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.