ஜூலை 30, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள சமயநல்லூர், சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதான நபர் விக்னேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய பரிமளா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான விக்னேஷ் வேலைக்கு செல்லாமல் தனது மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. My TVK App: தவெக-வில் உறுப்பினராவது எப்படி?.. தவெக வெப்சைட் மூலம் இணைய முழு விபரம் இதோ.!
விஷம் குடித்த மனைவி :
இதனால் மனமுடைந்த மனைவி பல நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மது குடிப்பதற்காக தனது மனைவி அணிந்திருந்த அரை பவுன் தங்கச்சங்கிலியை கேட்டு விக்னேஷ் தகராறு செய்துள்ளார். இதற்கு மனைவி மறுப்பு தெரிவிக்கவே, ஆவேசமடைந்தவர் மனைவியை தாக்கி விட்டு வெளியே சென்றுள்ளார். இதனிடையே மன உளைச்சலில் இருந்தவர் இனியும் தான் வாழ்ந்து என்ன செய்யப் போகிறோம் என்ற எண்ணத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தாலியை பறித்து சென்ற கணவன் :
இதனை அடுத்து வீட்டிற்கு வந்த விக்னேஷ் மனைவி மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு எந்தவித பதற்றமுமின்றி அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்து மதுக்கடைக்கு மது வாங்க சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தொடர் அழுகுரல் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் மயங்கிய நிலையில் இருந்த பரிமளாவை மீட்டு உடனடியாக மதுரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சமயநல்லூர் காவல்துறையினர் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.