செப்டம்பர் 06, கோயம்பேடு (Chennai News): சென்னையில் உள்ள நெற்குன்றம் பகுதியில் வசித்து வருபவர் வரலட்சுமி. இவர் கடந்த ஜூலை 14ம் தேதி காஞ்சிபுரம் சென்றுவிட்டு, பின் மீண்டும் அரசு பேருந்தில் கோயம்பேடு வந்தார். கையில் கம்மல், தோடு உட்பட 4 சவரன் நகைகளை கொண்டு வந்த நிலையில், பேருந்தில் இறக்கிவிட்டு பார்க்கும்போது அவை மாயமானது தெரியவந்தது. இதனால் பதறிப்போன வரலட்சுமி, கோயம்பேடு காவல் நிலையத்தில் நகைகள் மாயமானது குறித்து உடனடியாக புகார் அளித்தார். வானிலை: கடலூர், தஞ்சாவூர் உட்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை அறிவிப்பு.!
பேருந்து பயணத்தில் நகை மாயம்:
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பெண் வந்து சென்ற பேருந்தின் விபரம், நேரம் போன்றவற்றை சேகரித்து விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொடர் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், பாரதி நகைகளை திருடியது தெரியவந்தது. அப்போது, பாரதி குறித்த அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.
திமுக பிரமுகர் கைது:
அதாவது, பாரதி திருப்பத்தூர் மாவட்டம் அரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பதாகவும், திமுகவில் பொறுப்பில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இவரின் மீது வேலூர், ஆம்பூர் உட்பட திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. தற்போது பாரதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் வேறு யாரிடமும் சம்பவத்தன்று கைவரிசை காண்பித்தாரா? அது குறித்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என விசாரணை நடந்து வருகிறது.