CSG Vs SS Highlights (Photo Credit: @TNPremierLeague X)

ஜூலை 19, கோயம்புத்தூர் (Sports News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர், சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் முதல் 9 லீக் ஆட்டங்கள் நடைபெற்றது. தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள், கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. Car Accident: சிறுவன் ஓட்டிய கார்.. தொழிலாளி மீது மோதி பரிதாப பலி.. பற்றி எரிந்த கார்..!

நேற்று நடைபெற்ற 17-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-சேலம் ஸ்பார்ட்டன்ஸ் (CSG Vs SS) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார் 17 ரன்களிலும், ஜெகதீசன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட்ஆகி வெளியேற, அதிகபட்சமாக கேப்டன் பாபா அபராஜித் 41 ரன்கள் அடித்தார்.

இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 156 ரன்கள் எடுத்தது. சேலம் தரப்பில் பொய்யாமொழி, சன்னி சந்து தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக முஹம்மது அட்னான் கான் 31 ரன்னிலும், ராபின் பிஸ்ட் 36 ரன்னிலும் வெளியேறினர். சேலம் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை பாபா அபராஜித் பெற்று சென்றார்.