
மே 30, முல்லான்பூர் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. நேற்று (மே 29) நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி பைனலுக்கு சென்றது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 3வது மற்றும் 4வது இடத்தை பிடித்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (GT Vs MI) அணிகள் இன்று (மே 30) எலிமினேட்டர் போட்டியில் மோதுகின்றன. GT Vs MI Eliminator: எலிமினேட்டர் போட்டியில் குஜராத் - மும்பை அணிகள் மோதல்.. மும்பை டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் (Gujarat Titans Vs Mumbai Indians):
இப்போட்டி, நியூ சண்டிகரில் உள்ள முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி 5 வெற்றியும், மும்பை இந்தியன்ஸ் அணி 2 வெற்றியும் பெற்றுள்ளன. இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித் சர்மா - ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியான தொடக்கம் கொடுத்தது.
மும்பை இந்தியன்ஸ் அபாரம்:
முதல் விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில், பேர்ஸ்டோவ் 47 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 33 ரன்களில் நடையை கட்டினார். மறுபுறம், ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் (81 ரன்கள்) கடந்து அவுட்டானார். திலக் வர்மா 11 பந்துகளில் 25 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். ஹர்திக், 9 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார். இறுதியில், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 228 ரன்கள் அடித்துள்ளது.