செப்டம்பர் 14, சென்னை (Sports News): இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025-ஆம் ஆண்டுக்கான தக்கவைப்பு விதிகளை வெளியிடுவதை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது. இந்த அறிவிப்பு வெளிவர செப்டம்பர் இறுதி வரை தாமதமாகலாம் எனவும் தெரிகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
இந்நிலையில், கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக எம்எஸ் தோனி (MS Dhoni) விளையாடி வருகிறார். இதுவரை அவரது தலைமையில் 5 முறை அணி கோப்பையை வென்றுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தனது கேப்டன்சியை ருதுராஜ்க்கு கொடுத்தார். வருகின்ற 2025-ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் (IPL Mega Auction 2025) நடைபெற உள்ள நிலையில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகு தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பிறகு ஐபிஎல்-லில் மட்டுமே விளையாடி வருகிறார். IND Vs BAN Test Series 2024: இந்தியா Vs வங்கதேசம் போட்டி விவரங்கள்; நேரலையில் பார்ப்பது எப்படி..? விவரம் உள்ளே..!
அன் கேப்டு வீரர்:
தற்போது, வீரர்களை தக்கவைக்கும் விதிமுறைகள் குறித்து பிசிசிஐ விவாதித்து வருகின்றது. குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றிருந்தால், அன் கேப்டு வீரராக (Uncapped Player) பயன்படுத்தலாம். கடைசியாக 2021-ஆம் ஆண்டு இந்த விதிமுறை இருந்தது. தற்போது, பிசிசிஐ இந்த விதியை மீண்டும் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. இது தோனி போன்ற வீரர்களுக்கு ஆதரவாக இருக்கும். இருப்பினும், இந்த விதி அமலுக்கு வந்தாலும், பிசிசிஐ எத்தனை வீரர்களை அணிகளை தக்கவைத்துக் கொள்ள அனுமதித்தாலும், தோனி ஒரு முக்கிய வீரராக இருக்கக்கூடும் என்று சிஎஸ்கே அதிகாரிகள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர்.