டிசம்பர் 16, பெங்களூரு (Sports News): இந்தியாவில் ஐபிஎல் தொடர் போன்றே மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்காக, மகளிர் பிரீமியர் லீக் (WPL 2025) தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், இந்திய வீராங்கனைகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு வீராங்கனைகளும் அதிகளவு பங்கேற்று விளையாடி வருகின்றனர். கிட்டத்தட்ட வெளிநாட்டு லீக் தொடரில் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு சமமாக வீராங்கனைகளுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் டபுள்யுபிஎல் 2025ஆம் ஆண்டுக்கான ஏலம் நேற்று (டிசம்பர் 15) பெங்களூருவில் நடைபெற்றது. IND Vs AUS 3rd Test: 51 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து இந்தியா சொதப்பல்.. மழையால் முடிவுக்கு வந்த 3ஆம் நாள் ஆட்டம்..!
இதில், தமிழக வீராங்கனை கமலினி (G Kamalini) பெயர் வந்ததும் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி போட்டது. அவருடைய ஆரம்ப விலையான 10 லட்சத்தில் இருந்து, ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் கொடுத்து மும்பை அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. 16 வயது வீராங்கனையான கமலினி, மதுரையை சேர்ந்தவர் ஆவார். கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக அவர் சென்னை வந்தார். அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அகாடமியில் சேர்ந்து கமலினி பயிற்சி எடுத்து வந்துள்ளார். மேலும், தனக்கு கிடைக்கும் வாய்ப்பில் சிறப்பாக விளையாடி உள்ளூர் போட்டிகளில் அதிரடி பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர் என்ற பெயரை கமலினி பெற்றார். மேலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இதனையடுத்து, தமிழ்நாடு அண்டர் 19 அணியில் தேர்வு செய்யப்பட்டு அதிலும் அசத்தியிருக்கிறார். கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற அண்டர் 19 கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 311 ரன்களை கமலினி குவித்துள்ளார். பின், அவர் இந்திய அண்டர் 19 அணியில் தேர்வு செய்யப்பட்டு, அப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் கமலினி 79 ரன்கள் குவித்து இருக்கிறார். இதன்மூலம், கமலினி தற்போது அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணியில் தேர்வாகியுள்ளார். இந்நிலையில், நேற்று காலை பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 29 பந்துகளில் கமலினி 44 ரன்கள் குவித்தார். அன்று மாலையில் கமலினி மும்பை அணியில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழக வீராங்கனை ஒருவர் 16 வயதிலே மகளிர் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சமூக வலைதளத்தில் கமலினிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.