Ravindra Jadeja IND vs ENG 1st ODI (Photo Credit: @Cricgression X)

பிப்ரவரி 07, நாக்பூர் (Sports News): இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், இந்தியா 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி (IND Vs ENG) நேற்று (பிப்ரவரி 06) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் (VCA) மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா வெற்றி:

முதலில் விளையாடிய இங்கிலாந்தை 47.4 ஓவரில் 248 ரன்களுக்கு இந்தியா சுருட்டியது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 52, ஜேக்கப் பேத்தல் 51 ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்தியா சார்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அறிமுக வீரர் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அடுத்ததாக 249 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் 2, ஜெய்ஸ்வால் 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். இருப்பினும் சுப்மன் கில் 87, ஸ்ரேயாஸ் ஐயர் 59, அக்சர் படேல் 52 ரன்கள் எடுத்து 38.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற வைத்தனர். IND Vs ENG 1st ODI: டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு.. இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்..!

ஜடேஜா சாதனை:

இதனால், இந்தியா 1 - 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 87 ரன்கள் எடுத்த கில் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேபோல 9 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா (Indian Cricketer Ravindra Jadeja) 12* ரன்களும் அடித்து அசத்தினார். இந்த 3 விக்கெட்டுகளையும் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மொத்தம் 42* விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து மோதிய ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்து ஜடேஜா புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்கள்:

ரவீந்திர ஜடேஜா - 42*

ஜேம்ஸ் ஆண்டர்சன் - 40

ஆண்ட்ரூ பிளின்டாப் - 37

ஹர்பஜன் சிங் - 36

ஜவஹல் ஸ்ரீநாத், ரவிச்சந்திரன் அஸ்வின் - 35

ஜடேஜா அபாரம்:

மேலும், இப்போட்டியில் 3 விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஜடேஜா மொத்தம் 600* விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே அவர் பேட்டிங்கில் 6000 ரன்கள் குவித்துள்ளார். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகள் விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய ஸ்பின்னர் என்ற சாதனையையும் ஜடேஜா படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, கபில் தேவுக்கு பின் அந்த சாதனையை படைக்கும் 2வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.