
ஜூன் 02, அகமதாபாத் (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) தொடரின் லீக் சுற்று போட்டிகள் கடந்த மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும், 2வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிய முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து, 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்திருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய எலிமினேட்டர் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்று, முதலாவது தகுதி சுற்றுப்போட்டியில் தோல்வியடைந்த, பஞ்சாப் அணியுடன் 2வது தகுதி சுற்றில் மோதியது. நேற்று நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்று இறுதிபோட்டிக்கு சென்றது. Heinrich Klaasen Retirement: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஹென்ரிச் கிளாசென் திடீர் ஓய்வு.. ரசிகர்கள் ஷாக்..!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ எதிர் பஞ்சாப் கிங்ஸ் (Royal Challengers Bangalore Vs Punjab Kings):
இதில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (RCB Vs PBKS, IPL 2025 Final) அணியை நாளை (ஜூன் 03) எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி, நாளை இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடர் வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இதனால், இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
நேருக்கு நேர்:
இவ்விரு அணிகளும் இதுவரை 36 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 வெற்றியும், பஞ்சாப் கிங்ஸ் அணி 18 வெற்றியும் பெற்றுள்ளன.
அகமதாபாத் வானிலை நிலவரம் (Ahmedabad Weather Today):
நாளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு எதிர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை மழை குறுக்கிட்டால், ஐபிஎல் விதிகளின்படி, இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்படும். இறுதிப்போட்டிக்கு முன்னர் மழை குறுக்கிட்டால், 120 நிமிடங்கள் (2 மணிநேரம்) வரை ஆட்டம் ஒத்திவைக்கப்படும். இதனையடுத்து, மழை தொடர்ந்தால், ஓவர்கள் குறைக்கப்படும். பின்னர் டிஎல்எஸ் (DLS) முறைப்படி, இறுதிப்போட்டி நடைபெறும். 5 ஓவர்கள் வரை நடைபெறலாம். போட்டி நடைபெறவில்லை என்றால், இறுதிப்போட்டி அடுத்த நாளுக்கு (ரிசர்வ் டே) வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் டே-யிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படும். இருப்பினும், மழை குறுக்கிடும் நிலையில், சூப்பர் ஓவர் நடத்தப்படும். சூப்பர் ஓவர் டிராவானால், மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்படும். மழை தொடர்ந்து பெய்து, சூப்பர் ஓவர் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு ஐபிஎல் கோப்பை வழங்கப்படும். தற்போது, நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிலுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
நேரலையில் பார்ப்பது எப்படி?
டாடா ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின், அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஆன்லைனில் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் (Jio Hotstar) நேரலையில் பார்க்கலாம்.