Agriculture (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 18, சென்னை (Agri Tips): வயலில் மீன்களையும் விவசாயத்தை சுழற்சி முறையில் வேளாண்மை செய்து லாபம் ஈட்டிவருகிறார் புதுகோட்டை மாவட்டைத்தை சேர்ந்த விவசாயி பொன்னையா. விவசாய குடும்பம் என்பதால் ஆரம்பத்தில் இருந்து தனது 13 ஏக்கர் நிலத்தில் மற்றவர்களைப் போலவே நெல், கம்பு, சோளம், காய்கறிகளை மட்டுமே விவசாயம் செய்து வந்திருக்கிறார்.

நெல் விவசாயத்தில் மட்டும் கவனம் செலுத்தி வந்தவர், 2008ம் ஆண்டு மீன் வளத்துறையின் நீர்வள, நிலவளத் திட்டம் மற்றும் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் 90% மானியத்துடன் மீன் குளம் அமைத்து தருவதற்கான திட்டம் இருந்தது. அதன் அடிப்படையில் அரசு சார்பிலிருந்து வந்து குளம் அமைத்து மீன் வளர்ப்பை பற்றி சொல்லித் தர வந்தனர். விவசாய நிலத்தில் குளம் அமைக்க முதலில் விருப்பமில்லை. பிறகு ஆலோசனைகளைக் கேட்டு மீன் குளத்தை அமைத்து மீன் வளர்ப்பை தொடங்கியுள்ளார் என கூறினார். Ice Bath: பிரபலங்களின் ஐஸ் பாத்.. எவ்வாறு ஐஸ்ஸில் குளிப்பது? தவிர்க்க வேண்டியவர்கள் யார்? விபரம் உள்ளே.!

மீன் வளர்ப்பு, நெல் சாகுபடி:

எனது நிலத்தில் முதலில் 10,000 சதுர அடியில் குளம் வெட்டிக் கொடுத்து, 1000 மீன் குஞ்சுகளையும், அதற்கு தேவையான தீவனங்களையும், முறையான பயிற்சியையும் அளித்தனர். பின் தினமும் 4 - 5 முறை தீவனம் வைத்து வந்தேன். ஒரு மாதத்திலேயே 200 கிராம் அளவிற்கு மீன்கள் வளர ஆரம்பித்தது. அடுத்த நான்கு மாசத்திலேயே நல்ல மகசூல் கிடைத்தது. 6 மாதத்தில் அனைத்தையும் விற்று விட்டேன். மறுமுறை அதீத ஆர்வத்தில் 2000 மீன் குஞ்சுகளை அந்த குளத்திற்கு விட்டுவிட்டோம். மீண்டும் அரசின் சார்பிலும் 1000 மீன் குஞ்சுகளை தந்தார்கள் அதையும் அதில் விட்டு அதிக தீவனங்களை கொடுத்தேன். ஆனால் மீன்களின் அடர்த்தி அதிகமாக இருந்ததால் அவைகளுக்கு சரியான ஆக்சிஜன் இல்லமால் இறக்க ஆரம்பித்துவிட்டது. அரசு அதிகாரிகள், இதில் பாதி மீன்களை வேறு குளத்தில் மாற்றிவிட வேண்டும் என அறிவுரை கொடுத்தார்கள்.

அந்த குட்டையின் பக்கத்தில் அரை ஏக்கரில் வெள்ளை பொன்னி நடவு செய்து பால் பிடிக்கும் தறுவாயில் இருந்தது. அந்த சமயத்தில் புயல், மழை காரணமாக வயலில் முழுவதும் தண்ணீர் நிரம்பிவிட்டது. மீன்களும் வளர்ச்சி இல்லாமல் இறந்துகொண்டிருந்தன. இதில் வயல் முழுதும் தண்ணீர் நிரம்பியிருந்ததால் யோசிக்காமல் ஒரு 1000 மீன் குஞ்சுகளை அந்த வயலில் விட்டுவிட்டோம். இடையில் தண்ணீர் குறையும் போது ஓரிரண்டு முறை தண்ணீர் கொடுத்து வந்தோம்.

ஆழம் அகலம் எல்லாம் குறைவாக இருந்ததால் மகசூல் வராது என்று எண்ணி தீவனமும் குறைவாகவே கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கு மாறாக வயலில் சாய்ந்த பயிர்களின் தாள் முழுவதையும் மீன்கள் உணவாக உண்டு வந்தன. அந்த சமயம் எங்களுக்கு எதிர்பார்க்காத மசூல் கிடைத்தது. 1000 மீன் குஞ்சுகளை விட்டதில் 750 கிலோ வரை மகசூல் கிடைத்தது. அதன் பின்னரே மீன் வளர்க்க 3 முதல் 5 அடி தேவையில்லை ஒன்றரை அடியிலேயே வளர்க்கலாம். அதுவும் நடவு வயலில் வளர்க்கலாம் என தெரிந்தது. அதிலிருந்து இன்று வரை 10 வருடங்களுக்கு மேல் நடவு வயலில் சுழற்சி முறையில் மீன் வளர்ப்பும், நெல் சாகுபடியும் செய்து வருகிறேன் என்று கூறினார்.

குட்டை அமைத்து மீன் வளர்ப்பதை விட இவ்வாறு வளர்ப்பது செலவும் குறைவு. கறையை மட்டும் சற்று உயரப்படுத்தினால் போதும் என்கிறார். சுழற்சியில் மீன் வளர்த்த நிலத்தில் பயிரிடும் போது உரம், பூச்சி மருந்துகள் தேவைப்படுவதில்லை. மீன்களின் கழிவுகளே நிலத்திற்கு உரமாகிறது. தனியாக உரங்கள் பயிர்களுக்குத் தேவைப்படுவதில்லை. இதனால் முன்பு கிடைத்த லாபத்தை விட சுழற்சி முறையில் அதிகமாகவே லாபம் கிடைக்கிறது. இடைத்தரகர் இல்லாமல் வியாபாரிகளுக்கு சில்லரையாக மீன்களை பிடித்து தருகிறோம். சந்தைகளுக்கு நேரடியாகவும், எடுத்து சென்று விற்கிறோம் இதனால் இடைத்தரகர் செலவையும் குறைக்க முடிகிறது. குறைந்த அளவுகளில் மீன்களைப் பிடிப்பதால் அதிக ஆட்களும் தேவையில்லை எனக் கூறுகிறார்.

8 ஏக்கரில் மீன் வளர்ப்பில் ஒரு ஏக்கர் மீன் குஞ்சுகளை வளர்ப்பதற்கான நர்சரியும் அமைத்து வளர்த்து வருகிறேன். 4 ஏக்கரில் சுழற்சி முறையிலும், 3 ஏக்கரில் வருடம் முழுவதும் மீன் வளர்ப்பும் செய்து வருகிறேன். மொத்தம் 7 ஏக்கரில் 5500 கிலோ கிடைக்கிறது. வருடத்திற்கு செலவுகள் போக 7 லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கிறது. என்னுடைய மனைவி பாக்கியலெட்சுமி இல்லாமல் இவை அனைத்தும் சாத்தியமாகியிருக்காது. என்னை விட அவரே அதிகமாக மீன்களுக்கு தீவனமளிப்பது முதல் மீன்களை சில்லரையாக பிடித்து தருவது வரை செய்கிறார்.