Drug Injection (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 02, செய்யாறு (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கண்ணியம் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் சில்க் என்கிற ஜெமினி (வயது 22). அதே பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவரது மகன் அக்னி என்கிற சுனில் (வயது 19). நண்பர்களான இவர்கள் இருவரும் போதை பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். அடிக்கடி போதை ஊசி (Drug Injections) செலுத்திக்கொள்வதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 23ஆம் தேதி சுனில், ஜெமினி வீட்டுக்கு சென்று போதை ஊசி செலுத்திக்கொள்ளலாம் என அழைத்துள்ளார். அதற்கு ஜெமினி மறுத்துள்ளார். இதில் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டுள்ளனர். Tiruvallur Shocker: அத்தை சொன்ன பொய்யால் பறிபோன கள்ளக்காதலன் உயிர்; கொலை கேசில் சிக்கிய இளைஞன்.. திருவள்ளூரில் ஷாக்.!

போதை ஊசியால் தகராறு:

இந்நிலையில், கடந்த மார்ச் 28ஆம் தேதி மாலை சுனில், அவரது நண்பர்களான புதுத்தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 20), நாவல்பாக்கத்தை சேர்ந்த அருண்குமார் (வயது 23), திலீப்குமார் (வயது 27), பெங்களூரான் ஆகியோர் ஜெமினி வீட்டிற்கு சென்று போதை ஊசி செலுத்த வரும்படி அழைத்து சென்றுள்ளனர். 2 நாட்கள் ஆகியும் ஜெமினி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சரவணன் செய்யாறு காவல்நிலையத்தில் கடந்த மார்ச் 30ஆம் தேதி புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெமினியின் நண்பர்கள் சுனில், கார்த்திக் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், போதை ஊசி செலுத்திக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் ஜெமினியை, சுனில் உட்பட 5பேர் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை (Murder) செய்தது தெரியவந்தது.

வாலிபருக்கு கத்திக்குத்து:

இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், சுனில், கார்த்திக், அருண்குமார், திலீப்குமார், பெங்களூரான் ஆகியோர் போதை ஊசி செலுத்திக்கொள்ளலாம் எனக்கூறி ஜெமினியை அழைத்துக்கொண்டு கீழ்புதுப்பாக்கம்-புளியரம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள நீரோடை கால்வாய் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இரவு 11மணியளவில் போதை ஊசி செலுத்திக்கொள்வது தொடர்பாக அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுனில், குமரேசன், கார்த்திக் ஆகியோர் ஜெமினியை சரமாரி தாக்கியுள்ளனர். அப்போது சுனில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜெமினியின் கழுத்து உட்பட உடலில் பல்வேறு இடங்களில் சரமாரி குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெமினி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவரது சடலத்தை பேனரில் சுற்றி புளியரம்பாக்கம் ஏரியில் வீசிவிட்டு, 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இருவர் கைது:

இதனையடுத்து, செய்யாறு காவல்துறையினர் நேற்று (ஏப்ரல் 01) அதிகாலை 3 மணியளவில் சுனில் தெரிவித்த பகுதிக்கு சென்று, ஜெமினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சுனிலின் நண்பரான, பிரபுதாஸ் மகன் கார்த்திக்கையும் கைது செய்தனர். தலைமறைவான அருண்குமார், திலீப் குமார், பெங்களூரான் ஆகிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.