ஜூன் 25, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சியில் உள்ள கருணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை வசித்து வருவோர், கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தனர். மொத்தமாக 58 பேர் வரை தற்போது உயிரிழந்திருக்கின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூபாய் 10 லட்சம் இழப்பீடு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சி சாராயம் மரணம் தொடர்பாக தற்போது வரை கோவிந்தராசு, சின்னத்துரை, தாமோதரன், ஜோதி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மெத்தனல் வாங்கி விற்பனை செய்தவர்களும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
முதல்வர், துறை அமைச்சர் பதவி விலக கோரிக்கை:
விசாரணையில், 19 வயது சிறுவன் வேதிப்பொருள் துறையில் அரைகுறையாக பயின்றுவிட்டு, சாராயம் காட்டமாக கிடைக்க மெத்தனாலை கலக்கலாம் என்று அறிவுரை வழங்கியதன் பேரில், அதனை கலந்து பெரும் சோகம் நடந்தது உறுதியானது. இந்த ஆலோசனை வழங்கி மெத்தனால் கலக்க மூலகாரணமாக இருந்த 19 வயது இளைஞர் மாதேஷ் கைது செய்யப்பட்டார். இதனிடையே, இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) பதவி விலக வேண்டும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான முத்துசாமி இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். Delhi Water Minister Atishi Admitted on Hospital: தண்ணீர் கேட்டு ஆம் ஆத்மி அமைச்சர் உண்ணாவிரத போராட்டம்; உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.!
அதிமுகவினர் கடும் போரட்டம்:
மேலும், சிபிசிஐடி விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அரசிடமும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவை (TN Assembly) கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், முதல் நாளில் இருந்து அதிமுகவினர் (AIADMK) கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அரசுக்கு எதிரான குரல் எழுப்பி வருகின்றனர். கருப்பு சட்டை அணிந்து பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர். இதனிடையே, ஜூன் 25 ஆம் தேதியான இன்று காலை 11 மணியளவில் அதிமுக எம்எல்ஏக்கள் குழு எடப்பாடி பழனிசாமி தலைமையில், ஆளுநரை சந்தித்து சிபிஐ விசாரணை வேண்டி கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கி நடைபெற்றது. தொடக்கத்தில் இருந்து அமலில் ஈடுபட்ட அதிமுகவினர், அரசுக்கு எதிரான கண்டனக் குரல்களை எழுப்பி இருந்தனர்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுகவினர்:
இதனையடுத்து, அதிமுக எம்எல்ஏக்களை இன்று ஒரு நாள் அவை நடவடிக்கையில் இருந்து நீக்கி சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டு இருக்கிறார். பேரவையை அவமதிக்கும் வகையில் செயல்படும் அதிமுகவினருக்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்படுவதாகவும் கூறிய அப்பாவு, அதிமுகவினரை காவலர்கள் வெளியேற்ற உத்தரவு பிறப்பித்தார். தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் அதிமுகவினரை வெளியேற்றினர். தமிழ்நாடு முதல்வரும் அதிமுகவினர் திட்டமிட்டு சட்டப்பேரவையில் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக கூறி இருக்கிறார்.