செப்டம்பர் 02, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் ஒன்றில் பெண் ஒருவர் விழுந்து பலியானதாக இன்று காலை தகவல்கள் வெளியாகி இருந்தன. அங்குள்ள சூளைமேடு முதலாவது தெரு வீரபாண்டி நகர் பகுதியில் மூடப்படாத மழை நீர் வடிகாலுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இதனை அடுத்து நிகழ்வு இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதிமுகவில் செங்கோட்டையன் போட்ட குண்டு.. பரபரப்பாகும் அரசியல் வட்டாரம்.. நடக்கப்போவது என்ன?.!
மக்கள் ஆவேசம் :
இதனிடையே மாநகராட்சியின் அலட்சியம் காரணமாக பெண் பலியாகி விட்டதாகவும், ஒரு மாதம் காலமாகியும் பள்ளம் மூடப்படவில்லை எனவும், மழைநீர் கால்வாயில் விழுந்து இன்னும் எத்தனை உயிர் தான் போகுமோ?, எப்பொழுதுதான் இதனை சரி செய்வீர்கள்? என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பி குற்றச்சாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி விளக்கம் :
அந்த அறிவிப்பின்படி, பெண் விழுந்ததாக கூறப்படும் பள்ளம் இரண்டடி பள்ளம். அதில் யாரும் விழுந்து பலியாக வாய்ப்புகள் இல்லை. அதே நேரத்தில் பெண்ணின் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளது. இதனால் குற்றம் ஏதும் நிகழ்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக உரிய விசாரணை நடந்து வருகிறது. மாநகராட்சியின் மீதும் இந்த விஷயத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை. விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.