ஜனவரி 02, கிண்டி (Chennai News): சென்னையில் உள்ள கிண்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் துறையில் பயின்று வருகிறார். இவர் அதே கல்லூரியில் நான்காம் ஆண்டு பயின்று வரும் மாணவருடன் காதல் உறவில் இருந்து வந்த நிலையில், கடந்த டிச.24 அன்று இரவு 07:30 மணிக்கு இருவரும் உணவு சாப்பிட்டுவிட்டு, காதலருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர், காதலனை மிரட்டி அடித்து துரத்திவிட்டு, பெண்ணை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.
அரசியல் கட்சிகள் போராட்டம்:
இதுதொடர்பான புகாரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஞானசேகரனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சொந்த மனைவியிடமும் பாலியல் விஷயத்தில் வேறொரு நபராக நடந்து கொண்டது அம்பலமானது. சாலையோர பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் ஞானசேகரன், அரசியல் கட்சியின் பின்புலம் ஒன்றிலும் இருந்து வந்திருக்கிறார். அவர் சார் ஒருவர் என பெண்ணிடம் மிரட்டி போனில் பேசியதால், அவர் குறித்தும் விசாரணை நடந்த வேண்டும் என அதிமுக, பாஜக, நாதக உட்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் முன்னெடுத்தன. போராட்டத்திற்கு காவல்துறை முட்டுக்கட்டை போட்டது. இன்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் (Thirumavalavan) எம்.பி செய்தியாளர்களை சந்தித்தபோது, பெண் வன்கொடுமை விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என கூறினார்.
இன்று பாமக போராட்டம் - சௌமியா அன்புமணி கைது:
இந்நிலையில், ஜனவரி 02, 2024 இன்று பாமகவின் (PMK) மகளிரணி சார்பில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிகேட்டு கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. போராட்டத்திற்கு காவல்துறையினர் சார்பில் அனுமதி கொடுக்கப்படாத நிலையில், போராட்டத்தை தலைமையேற்று நடத்த வந்த சௌமியா அன்புமணியை (Sowmiya Anbumani), காவல்துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, போராட்டம் நடத்த வந்த பாமக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
நீதிபதி வேல்முருகன் வருத்தம்:
சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமகவின் வழக்கறிஞர் கே. பாலு, போராட்டத்திற்கு அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி வேல்முருகன், அரசியல்கட்சியினரின் போராட்டத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக நீதிபதி வேல்முருகன் கூறுகையில், "அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த துயரத்தை அரசியலாக்குவது ஏன்?. ஊடகங்கள் விரும்பத்தகாததை வெளியிடுகிறது. பெண் பலாத்கார விவகாரத்தில் அனைவர்க்கும் பொறுப்பு இருக்கிறது. வழக்கை தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அரசியல்கட்சிகள் போராட்டம் விசாரணையை பாதிக்கும் வகையில் இருக்கிறது. விசாரணையை பாதிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. இவ்வாறான சம்பவம் நடந்ததற்கு ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும். விளம்பரத்திற்காக போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.
பாமகவின் கோரிக்கை நிராகரிப்பு:
அனைவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொருவரும் தங்களின் நெஞ்சில் கைவைத்து பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படும் என கூறுங்கள். ஆண் - பெண் என்ற பாகுபாடு என்பது வெட்கப்படவேண்டிய விஷயத்தில் ஒன்றாகும். போலீசாரின் நடவடிக்கையை அரசியலாக்க போராட்டம் நடத்துவது நல்லதல்ல. பாமகவினர் சார்பில் அனுமதி கேட்டு முறையிடப்பட்ட விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படுகிறது" என தெரிவித்தார்.