ஜூலை 14, மடிப்பாக்கம்: சென்னையில் உள்ள மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் துரித உணவகம் வைத்து நடத்தி வருகிறார். கார்த்திக்கின் மனைவி வனிதா. தம்பதிகளுக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
சமீபத்தில், வனிதா இரண்டாவது முறையாக கருவுற்றிருந்த நிலையில், தனது வீட்டருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் தேவையான சிகிச்சை மற்றும் பரிசோதனை போன்றவற்றையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் தேதி தவறாமல் பரிசோதனை செய்து கொண்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனிதா என்ற மருத்துவர் பரிந்துரை செய்த மாத்திரைகளை தவறாது உட்கொண்டும் வந்துள்ளார்.
ஒவ்வொரு முறை பரிசோதனையின் போதும் தனது குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அந்த மருத்துவமனையில் பிரசவம் மற்றும் குடும்ப கட்டுப்பாடுகளுக்கு ரூபாய் 80,000 மேற்படி செலவுகள் என அதிக கட்டணம் கூறப்பட்டதால், வனிதா கடந்த மே மாதம் எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு மகப்பேறு சிகிச்சைக்காக சென்று அனுமதியாகி உள்ளார்.
அங்கு கடந்த மே 10ம் தேதி குழந்தை பிறந்த நிலையில், குழந்தை பிறந்ததும் மருத்துவர்களிடம் வனிதா குழந்தையின் பாலினம் குறித்து கேட்டபோது, நாங்கள் தந்தையிடம் கூறுகிறோம் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர்.
உறவினர்களிடம் குழந்தை ஆண் மற்றும் பெண் உறுப்பு கொண்டு பிறந்ததாக தெரிவித்த மருத்துவர்கள், குழந்தையின் உடல்நலம் மோசமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். குழந்தை நோய்களோடு பிறந்துள்ளதால் இங்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கடந்த ஒரு மாதம் சிகிச்சை பெற்று வந்த குழந்தை இறுதியில் பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில், தனது கர்ப்ப காலத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாகவே குழந்தை இறந்து விட்டதாக கூறி தனியார் மருத்துவமனை முன்பு தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கியதை தெரிவித்ததை தொடர்ந்து, மருத்துவத்துறை அதிகாரிகளை சந்தித்து அவர் விரைவில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் அனிதாவிடம் கேட்கையில், "தாங்கள் எட்டு மாதம் வரை வனிதாவுக்கு சிகிச்சை அளித்தது உண்மைதான்.
அதன் பின் அவர் எங்கு சிகிச்சை கொண்டார்? பிரசவம் இங்கு நடைபெற்றது? என்பது குறித்து எங்களுக்கு தெரியாது. குழந்தை வயிற்றில் இருந்த போது எந்த விதமான பிரச்சினையும் இல்லை. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சொல்வது சரியானது கிடையாது" என்று தெரிவித்தார்.