செப்டம்பர் 03, சென்னை (Chennai News): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான இன்றைய வானிலை (Weather) அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலையில், தமிழகத்தில் ஒரு சில இடத்தில், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 39.1 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.6 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.
வங்கக்கடலில் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி:
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை பெரம்பூர் பகுதியில் ஆறு சென்டிமீட்டர் மழையும், சென்னை கொளத்தூர் பகுதியில் 5 சென்டிமீட்டர் மழையும், சென்னை ராயபுரம் பகுதியில் நான்கு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்கான நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பை பொறுத்தமட்டில், ஆந்திரா அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில், ஐந்தாம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
5 நாட்களுக்கான மழை நிலவரம்:
இதனால் மூன்றாம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தமட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். 3-Year-Old Boy Dies: 3 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து பலி; 10 நிமிடமாக துடிதுடித்த உயிர்.!
வங்கக்கடலில் சூறாவளிக்காற்று:
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தமட்டில் மூன்றாம் தேதி முதல் 7ஆம் தேதி வரையில் மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, அதனை ஒட்டிய குமரிக்கடல், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் முதல் 55 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
அரபிக்கடலில் சூறாவளிக்காற்று:
அதேபோல, அரபிக்கடல் பகுதியில் மூன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை மத்திய மேற்கு அரபிக் கடல், தென்மேற்கு அரபிக் கடல், மத்திய கிழக்கு அரபிக் கடல், கர்நாடக கடலோர பகுதி, கேரளா கடலோர, இலட்சத்தீவு பகுதி ஆகிய இடங்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகும் முதல் 65 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.