Baby (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 03, ஈஞ்சம்பாக்கம் (Chennai News): சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம், சாயிபாபா கோவில் தெருவில் வசித்து வருபவர் சுகுமாரன். இவர் கார் ஓட்டுநராக தொழிலதிபர் ஒருவரிடம் வேலை பார்த்து வருகிறார். தொழிலதிபரின் பணியாளர்கள் தங்க பிரத்தியேக குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் சுகுமாரன் தனது மனைவி மற்றும் 3 வயது மகன் நிதிஷ் ஆகியோருடன் வசித்து வருகிறார். Eggplant Cultivation: கத்தரிக்காய் அறுவடையில் நல்ல விளைச்சலுடன் வருமானமும் பார்க்க ஆசையா?.. விவசாயி கூறும் சூட்சமம் இதோ..! 

துடிதுடித்து மரணம்:

இவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பில் நீச்சல் குளம் (Swimming Pool) இருக்கிறது. இதனிடையே, சுகுமாரனின் மகன் நிதிஷ், நேற்று மாலை நேரத்தில் நீச்சல் குளம் அருகே விளையாடியதாக தெரியவருகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கிறார். சுமார் 10 நிமிடங்கள் வரை அங்கு யாரும் செல்லவில்லை என்பதால் சிறுவனை கவனிக்கவில்லை. பின் சிறுவன் நீச்சல் குளத்தில் துடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுவன் உயிரிழந்தார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு:

இதனால் உடைந்துபோன சிறுவனின் தாய், மருத்துவமனை வளாகத்திலேயே அமர்ந்து கதறியழுதார். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய முதலுதவி சிகிச்சை செய்ய தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றும், அவை இருந்திருந்தால் மகனை காப்பாற்றி இருக்கலாம் என்றும் சிறுவனின் உறவினர்கள் தரப்பில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து நீலாங்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.