Palakkad 4 Tamil Peoples Died | MK Stalin (Photo Credit: @JK247News / @mkstalin X)

நவம்பர் 04, தலைமை செயலகம் (Chennai News): கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், ஷோரனூர், பாரதபுழா பாலத்தில், துப்புரவு பணிகள் நடந்தபோது அவ்வழியாக வந்த டெல்லி - திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் இரயில் மோதி, தமிழகத்தை சேர்ந்த 4 துப்புரவு பணியாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த செய்தி மாநில அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், உயிரிழந்த துப்புரவு பணியாளர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, ரூ.3 இலட்சம் நிதிஉதவி அறிவித்துள்ளார். School College Holiday: தொடர் கனமழை; நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகா பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! 

இரங்கல் & நிதிஉதவி அறிவிப்பு;

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கேரளா மாநிலம்‌, பாலக்காடு, ஷோரனூர்‌, பாரதப்புழா பாலம்‌ அருகில்‌ நேற்று முன்தினம் (02.11.2024) பிற்பகல்‌ கேரளா எக்ஸ்பிரஸ்‌ இரயில்‌ எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில்‌ இரயில்‌ பாதையை சுத்தம்‌ செய்யும்‌ பணியில்‌ ஈடுபட்டிருந்த சேலம்‌ மாவட்டம்‌ மற்றும்‌ வட்டம்‌, ஆச்சாங்குட்டப்பட்டி, அடிமலை புதூர்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த லட்சுமணன்‌ (வயது 55) த/பெ.அண்ணாமலை, வள்ளி (வயது 45) க/பெ.லட்சுமணன்‌, காரைக்காடு, டி.பெருமாள்‌ பாளையத்தைச்‌ சேர்ந்த லட்சுமணன்‌ (வயது 45) த/பெ.ராமசாமி மற்றும்‌ அல்லிக்குட்டையைச்‌ சேர்ந்த ராஜம்மாள்‌ (வயது 43) த/பெ.வீரன்‌ ஆகிய நால்வரும்‌ உயிரிழந்தனர்‌ என்ற துயரகரமான செய்தியைக்‌ கேட்டு மிகுந்த அதிர்ச்சியும்‌, வேதனையும்‌ அடைந்தேன்‌.

இவ்விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கும்‌ அவர்களது உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு, உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம்‌ ரூபாய்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.