Chennai Flood, After Michaung Cyclone (Photo Credit: @Gayatri_Raguram / @pun_nagaii X)

டிசம்பர் 05, சென்னை (Chennai): வங்கக் கடலில் உருவாகியிருந்த மிக்ஜாங் புயல், தற்போது ஆந்திரா நோக்கி நகர்ந்துவிட்டது. ஆந்திராவில் உள்ள நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே, காவலி பகுதியில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது. சுமார் 3 மணிநேரம் கடந்து புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை ஆறுகளில் வெள்ளம்: இந்த புயலின் காரணமாக சென்னையை நவம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் புரட்டி எடுத்த மழை, நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்திவிட்டது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு, சைதாப்பேட்டை மற்றும் அடையாறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

முகாம்களில் தங்கவைக்கப்பட்ட மக்கள்: முக்கிய வீதிகள் அனைத்தும் வெள்ளக்காடாகியது. நகரின் வீதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கி சேதமடைந்தன. மக்களும் வீட்டை விட்டு வெளியேற இயலாமல் தவித்துப்போயினர். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். Delhi Air Pollution: தலைநகரில் மீண்டும் தலைதூக்கும் காற்றுமாசு பிரச்சனை: விவசாய கழிவுகள் எரிப்பால் தொடரும் அவலங்கள்.! 

குறைந்த மழையின் தீவிரம்: தற்போது, மழையின் தீவிரம் குறைந்தாலும், வெள்ள நீரை அகற்றும் பணியானது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத அளவு, 29% அதிக மழைபொழிவை சென்னை சந்தித்துள்ளதாக வானிலை ஆய்வு மையமும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருக்கிறது.

போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள்: மாநகராட்சி சார்பில் சாலைகளில் தேங்கியுள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. படிப்படியாக சென்னையின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

முதல்வர் நேரில் ஆய்வு: அதேபோல, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தற்போது வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார். முன்னதாக சென்னை மாநகர மேயர் பிரியா, சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் உட்பட பலரும் களத்தில் நின்று தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

சூரியனின் உதயமும், புதிய விடியலும்: கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை காரணமாக வெயிலின் ஒளி கூட தெரியாமல் இருந்த மக்கள், தற்போது சூரிய ஒளியை கண்டு மகிழ்ச்சியடைந்து இருக்கின்றனர்.

படிப்படியாக இயக்கப்படும் பேருந்து சேவை: நகரில் தண்ணீர் இல்லாத பகுதிகளில், பிரதான வழித்தடங்களில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. குறைந்தளவு போக்குவரத்தே இயக்கப்பட்டாலும், படிப்படியாக பாதைகள் சரி செய்யப்பட்டதும், மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.