Sathuragiri Hills (Photo Credit: @videos_way2news X)

செப்டம்பர் 30, வத்திராயிருப்பு (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, தாணிப்பாறை மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி (Sathuragiri Temple) சுந்தர மகாலிங்கம் (Sundara Mahalingam Temple) கோவில் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இக்கோவிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கும். அந்த வகையில், பௌர்ணமி, அமாவாசைக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு மொத்தமாகவே எட்டு நாட்கள் மட்டுமே கோவிலை சென்று அடைய முடியும். மேற்கு தொடர்ச்சி மலை மீது அமைந்துள்ள இப்பகுதியில், மழைக்காலங்களில் பக்தர்களுக்கு அனுமதி என்பது முற்றிலுமாக ஒரு சில நேரம் மறுக்கப்படும். இக்கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், வனத்துறை அனுமதி இருந்தால் மட்டுமே மலைக்கு சென்றுவர முடியும்.

மகாளய அமாவாசை:

இந்நிலையில், மகாளய அமாவாசையை முன்னிட்டு, இன்று முதல் வரும் 3ஆம் தேதி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புரட்டாசி (Purattasi Month) மாத பிரதோஷம் காரணமாக சென்னை, மதுரை, தூத்துக்குடி, விருதுநகர், திருச்சி ஆகிய பல்வேறு நகரங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்ததால், தாணிப்பாறை பகுதியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சில கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் நடைபயணமாக மலையடி வாரத்தைச் சென்று அடைந்து, பின் அங்கிருந்து மலைக்கு மேல் அனுப்பப்பட்டனர். Purattasi Month 2024: புண்ணியம் தரும் புரட்டாசி மாத விரத பலன்கள்.. சிறப்புகள் என்னென்ன..?

பக்தர்களுக்கு கட்டுப்பாடுடன் அனுமதி:

இதன்போது பக்தர்கள் கொண்டுவரும் உடமைகளை சோதனை செய்து, பாலித்தின் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மதுபோதை & சிகிரெட் போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இன்று மழைக்கான எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ள காரணத்தால், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்து கீழே இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், திடீரென மழை பெய்தால் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி அனுமதி மறுக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

மலைக்கு மேலே செல்லும் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லாத நிலையில், உடனடியாக சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு கீழே திரும்பவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வரும் மூன்றாம் தேதி வரை அனுமதி உள்ள நிலையில், இரண்டாம் தேதி அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.