ஜூன் 16, விழுப்புரம் நீதிமன்றம் (Viluppuram Court): கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ம் தேதி முன்னாள் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, அவருக்கான பாதுகாப்பு பணிகளை அன்றைய சட்டம்-ஒழுங்கு காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தாஸ் மேற்கொண்டு இருந்தார்.
இந்நிலையில், பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில், பணியில் ஈடுபட்டு இருந்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஐ.பி.எஸ் அதிகாரி புகார் அளிக்கவே, அந்த புகாரின் பேரில் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
புகார் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்துக்கொண்டதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மீதும் புகார் எழுந்தது. இதனிடையே, விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரசின் தரப்பில் 68 பேர் சாட்சியாக அறிவிக்கப்பட்டு நடைபெற்று வந்த விசாரணை அனைத்தும் 2023 ஏப்ரல் மாதம் 13ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இருதரப்பு வாதங்களும் பின் நடைபெற்றது. Kidney Stone Guinness Record: அம்மாடியோவ்… உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரக கல் அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றம்; கின்னஸ் சாதனையில் பதிவு..!
வழக்கு தொடர்பான விபரங்களை எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு, இவை நிறைவுபெற்று 61 பக்கத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் எழுத்துபூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டது.
இவ்வழக்கில் தீர்ப்பு இன்று (ஜூன் 16) அன்று வழங்கப்படும் என நீதிபதி புஷ்பராணி அறிவித்த நிலையில், காலை 10:30 மணியளவில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. அதன்படி, ராஜேஷ் தாஸின் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.