
மே 19, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம், சிவகிரி, மேகரையான் தோட்டத்து வீட்டில் வசித்த முதிய தம்பதி ராமசாமி - பாக்கியம். இவர்கள், ஏப்ரல் 28ஆம் தேதி மர்ம கும்பலால் கொடூரமாக கொலை (Double Murder Case) செய்யப்பட்டனர். கொலையாளிகளை பிடிக்க, 12 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அருகில் உள்ள அறச்சலுார் என்ற ஊரை சேர்ந்த பழைய குற்றவாளி ஆச்சியப்பன் (வயது 48), என்பவரை விசாரித்தனர். மேலும், தென்னை மரம் ஏறும் தொழிலாளர்களான மாதேஸ்வரன் (வயது 53), ரமேஷ் (வயது 52) ஆகிய மூவரையும், கடத்துார் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று, தீவிர விசாரணை நடத்தினர். Dharmapuri News: முன்பகை காரணமாக கூலித் தொழிலாளி வெட்டிக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
நீதிமன்ற காவல்:
விசாரணையில், மண்வெட்டியின் மரப்பிடியால் ராமசாமி - பாக்கியம் தம்பதியை தாக்கி கொலை செய்துள்ளது தெரியவந்தது. சிறு கத்திகளால் கை, காதுகளை வெட்டி நகைகளை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் 4வது நபராக கைது செய்யப்பட்டார். இந்த இரட்டைக் கொலை வழக்கில், ரமேஷ், மாதேஸ்வரன், ஆச்சியப்பன், ஞானசேகரன் ஆகிய 4 பேர் கைது செய்து விசாரிக்கின்றனர். 4 பேருக்கும் ஜூன் 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4 பேர் கைது:
இதுதொடர்பாக, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில் குமார் கூறுகையில், ஈரோடு சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் சேமலைக்கவுண்டம்பாளையத்தில் நடந்த கொலை வழக்கிலும் தொடர்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனங்களையும், நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனவரின் செல்போனையும் கைப்பற்றியுள்ளோம். கைது செய்யப்பட்ட ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். மேலும், நகையை உருக்கிக் கொடுத்த நகைக் கடை உரிமையால் ஞானசேகரனையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.