டிசம்பர் 13, மதுராந்தகம் (Chengalpattu News): வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து இருக்கிறது. இதனால் பல ஆறுகள், ஏரிகள், குளங்களில் நீர் நிரம்பி, உபரி நீர் வெளியேறி வருகிறது. தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து, சென்னையின் நீர் ஆதாரமான பல ஏரிகள் நிரம்பி வழிகின்றன. Tenkasi Rains: தென்காசி மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கனமழை; குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு..!
கரைபுரண்டு ஓடிய கிளியாறு வெள்ளம்:
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (Madurantakam) பகுதியில், தனியார் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கிக்கொண்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகளை, உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக கயிறு கட்டி மீட்டனர். வெள்ளம் கரைபுரண்டு ஓடிய தருணத்திலும், தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இயக்கி சென்ற காரணத்தால், பேருந்து வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாக முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது. மதுராந்தகம் கிளியாறு வெள்ளம் காரணமாக, பேருந்து சிக்கிக்கொண்டது.
தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது:
பவுஞ்சூர் கிராமத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பயணம் செய்த தனியார் பேருந்து, சகாய நகர் பகுதியில், கிளியாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, தாழ்வான பாலத்தில் சென்றபோது நீரில் சிக்கிக்கொண்டது. மதுராந்தகம் ஏரியில் இருந்து சுமார் 8000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், அதன் வெள்ளத்தில் பேருந்து சிக்கிக்கொண்டது. பேருந்தில் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் உள்ளூர் மக்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். பேருந்து மீட்கப்பட வழியின்றி நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும் பேருந்து மீட்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
கிளியாறு வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தனியார் பேருந்து:
செங்கல்பட்டு: கிளியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய தனியார் பேருந்து; பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள் #Chengalpattu | #Bus | #Rain | #TNRains | #RainUpdatewithPT pic.twitter.com/vEuJ3JfQL1
— PuthiyathalaimuraiTV () December 13, 2024
வீடியோ நன்றி: புதிய தலைமுறை தொலைக்காட்சி