Sudhakar | Chennai Anna Nagar Police Station (Photo Credit: @Adharmam_Manoj / @sunnewstamil X)

ஜனவரி 08, அண்ணா நகர் (Chennai News):  சென்னை அண்ணா நகரில், 10 வயதுடைய சிறுமி பலாத்கார விவகாரத்தில், குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட அஇஅதிமுக பிரமுகர், பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் 10 வயதுடைய சிறுமி, கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி உடல்நலம் குன்றி இருந்தார். இதனால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. பின் இதுகுறித்து சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிறுமியின் பெற்றோர் மீது தாக்குதல்:

பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில், அவரது பெற்றோர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் சிறுவனின் மீது புகார் அளித்த நிலையில், சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் கொடுத்த புகாரை ஏற்க மறுத்ததோடு, குற்றச்சாட்டுக்கு உள்ளான நபரின் பெயரை நீக்கவும் காவல் ஆய்வாளர் வலியுறுத்தி இருக்கிறார். இதனால் சிறுமியின் பெற்றோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாக வெளியிட்டனர்.

நீதிமன்ற உத்தரவின்பேரில் நடந்த விசாரணை:

இந்த விஷயம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கவனத்திற்கு செல்லவே, இது தொடர்பாக தாமாக முன்வந்து நீதிபதிகள் விசார்ணையை முன்னெடுத்தனர். மேலும், சிறுமியின் தாயார் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்திருந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐக்கு விசாரணைக்கு உத்தரவிட்டார். பின் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க இணை ஆணையர் சரோஜ் குமார் தாகூர், அண்ணா நகர் துணை கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. Electrocution Death: எலுமிச்சை பறிக்கச் சென்று நடந்த சோகம்; மின்சாரம் தாக்கி பெண் பரிதாப பலி.! மின்வாரிய ஊழியர்களின் அலட்சியம்.! 

அதிர்ச்சி தகவல் அம்பலம்:

விசாரணையில், 10 வயது சிறுமியின் பெற்றோருக்கு நடந்த கொடுமை அம்பலமானது. புகார் அளித்தவர்களின் பெற்றோர்களே தாக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. குற்றவாளிக்கு ஆதரவாக அண்ணாநகர் 103வது வட்டச் செயலாளர் சுதாகர் என்பவர், நேரடியாக காவல் நிலையம் வந்து புகார் கொடுத்த பெற்றோரை மிரட்டிய சம்பவமும் அரங்கேறியுள்ளது. சிறுமியிடம் நண்பராக பழகிய 14 வயது சிறுவனை, போலியாக பலாத்கார வழக்கில் கைது செய்யும்படியும் காவல் ஆய்வாளரிடம் கூறப்பட்டுள்ளது. இதன்பேரில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயரை நீக்கிய அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜு, போலி குற்றவாளியை கைது செய்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் உறுதி செய்யப்பட்டது.

காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம்:

இதனையடுத்து, அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர், பெண் காவல் ஆய்வாளர் ராஜி ஆகியோர் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனிடையே, இவர்கள் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் ராஜி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுதாகர் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3