செப்டம்பர் 09, செங்குன்றம் (Chennai News): திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் ஜெயவேல் (வயது 52). இவரின் மனைவி உஷா (வயது 48). தம்பதிகளுக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்தார். இவர் மருத்துவம் பயின்று வந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் மரணம் அடைந்தார். ஆசையாக பெற்றெடுத்து வளர்த்த ஒரே மகனும் விபத்தில் பலியாகிவிட்டனே என தம்பதி துக்கத்தில் இருந்துள்ளனர்.
மறுவாழ்க்கையில் அடியெடுத்து வைத்த தம்பதி:
பின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று, இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்து இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க முடிவு செய்துள்ளனர். தம்பதிகளின் எண்ணப்படி இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளார். குழந்தைகளுக்கு சாய் மோனிஷா, சாய் மோகித் என பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்துள்ளனர். Bus - Car Crash: அரசு பேருந்து மீது கார் மோதி பயங்கர விபத்து; 5 பேர் பரிதாப பலி... இராமநாதபுரத்தில் சோகம்.!
பயணத்தில் நடந்த சோகம்:
இதனிடையே, சென்னையில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருக்கும் உஷாவின் தாயார் வீட்டிற்கு தம்பதிகள் நேற்று புறப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் குழந்தைகளுடன் வாடகை காரில் புறப்பட்டு வந்தபோது, செங்குன்றம் அலமாதி பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலைத்தடுப்பு மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர் அனீஸ் (வயது 30), உஷாராணி, குழந்தை மோனிஷா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிவேகத்தில் நடந்த துயரம்:
மேலும், காரில் பயணம் செய்த ஜெயவேல், சாய் மோகித் ஆகியோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஓட்டுனரின் அதிவேகம் மற்றும் உறக்க கலக்கம் ஆகியவை விபத்திற்கு காரணமாக அமைந்தது தெரியவந்துள்ளது.