செப்டம்பர் 18, வியாசர்பாடி (Chennai News): சென்னையில் வலம்வரும் பிரபலமான தாதாக்களில் முக்கியமானவர் காக்கா தோப்பு பாலாஜி (வயது 36). தொடக்ககாலத்தில் தனது பகுதியில் நடைபெறும் அடிதடி விவகாரங்களில் கலந்துகொண்டு கைதான பாலாஜி, தனது உறவினர் ஒருவரை பார்த்து மக்கள் அலறுவதைப்போல, தன்னையும் கண்டு அவர்கள் பயம்கொள்ள வேண்டும் என எண்ணி ரௌடி வழியில் பயணிப்பதை தேர்வு செய்துள்ளார். 1990 காலகட்டங்களில் சிறிய அளவிலான அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர், பின்னாளில் வியாசர்பாடி நாகேந்திரன் என்பவருடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு கொலை, ஆட்கடத்தல் சம்பவத்திலும் ஈடுபட்டு பிரபலமாகி இருக்கிறார்.
14 வயதில் ஏற்பட்ட ஆசை:
பாலாஜி என்ற பெயரை கொண்டவர், சக கூட்டாளிகளால் காக்கா தோப்பு பாலாஜி (Kakka Thoppu Balaji) என அழைக்கப்பட்டவர், காவல்துறை பதிவேட்டில் அதே பெயரால் அழைக்கப்பட்டுள்ளார். ரௌடிகளுக்கு இடையே நடந்த மோதலில் கொலை செய்வது, கூலிப்படை ஏவி கொள்வது என சென்னையின் பல காவல் நிலையங்களில் பாலாஜியின் மீது வழக்குகள் குவிந்து இருக்கின்றன. தனது 09ம் வகுப்பின்போதே ரௌடி தான் கெத்து என்ற எண்ணத்தில் இருந்து வந்த பாலாஜி, அதில் இருந்த ரௌடியாக வலம்வர எண்ணி இருக்கிறார். இதற்காக 90களில் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த யுவராஜ், இன்பராஜ் ஆகியோருடன் நட்பு வைத்துக்கொண்டு தன்னை மெருகேற்றத்தொடங்கியவர், சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் வசித்து வந்த ரௌடியின் அண்ணன் புஷ்பா என்பவரை கொலை செய்து முதல் சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார். இந்த கொலை தான் பாலாஜியின் முதல் குற்றச்சம்பவம் ஆகும்.
ரௌடிகளுடன் நட்பு:
இதனால் பாலாஜியின் பெயர் முன்னிலையில் வந்துவிட, யுவராஜுக்கும் - பாலாஜிக்கும் இடையே யார் பெரியவர்? என்ற போட்டி ஏற்பட்டு யுவராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்பின்னரே பாலாஜி நிரந்தரமாக காக்கா தோப்பு பாலாஜியாக உருப்பெற்று இருக்கிறார். கொலை வழக்குகளில் சிறையில் இருக்கும் பாலாஜி, பிரபல தாதாக்கள் நடராஜன், மணல்மேடு சங்கர் நட்பை பெற்று வடசென்னையை தனது கைக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொண்டார். அதற்கு தடையாக இருந்தவர்களை கொன்று குவித்து சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அடையாளப்படுத்தப்பட்டார். Nellai Accident: லாரி - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி சோகம்; நால்வர் பரிதாப பலி..!
சென்னையை அதிரவைத்த இரட்டைக்கொலை:
வடசென்னையை சேர்ந்த ரௌடி பில்லா சுரேஷை, அவரது வீட்டின் மேற்கூரையை உடைத்துச் சென்று, பில்லாவின் மனைவியின் கண்முன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையை அரங்கேற்றிய அரைமணிநேரத்திற்குள், ரௌடி விஜி என்பவரும் பாலாஜியால் கொல்லப்படுகிறார். வடசென்னையை அதிரவைத்த இரட்டைக்கொலைகளில், பாலாஜி செயல்படுத்திய விஜி, பில்லா சுரேஷ் கொலைகள் இன்றளவும் பேசுபொருளாக இருக்கிறது. தனது ரௌடியிசத்தை வைத்து செம்மரக்கடத்தலிலும் ஈடுபட்டு பணத்தை பார்த்த பாலாஜியின் வாழ்க்கை, ஒருகட்டத்தில் சிறையிலேயே இருந்தது.
59 வழக்குகள்:
சிறையில் இருந்தாலும் பிற ரௌடிகள் அல்லது அவர்களுக்கு வரும் கொலை சம்பவங்களுக்கான திட்டத்தை செயல்படுத்தி கொடுப்பது, வெளியே இருக்கும் தனது ஆதரவாளர்களுக்கு கொலை, மிரட்டல் சம்பந்தமான வேலைகளை கொடுப்பது என கூலிப்படையாகவும் செயல்பட்டு வந்த பாலாஜி, சிறையில் இருந்து வெளியே வந்ததும் தலைமறைவாகி குற்றச்செயல்களை தொடர்ந்து வந்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 59 வழக்குகள் நிலுவையில் இருக்கும் பாலாஜி, இன்று வியாசர்பாடி பகுதியில் சென்னை காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
என்கவுண்டரில் பலி:
விசாரணைக்கு பாலாஜியை அழைத்துச்சென்றபோது, காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற காரணத்தால், தற்காப்புக்காக சுட்டதில் அவர் உயிரிழந்தார். பாலாஜியின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பாலாஜி தாக்கியதில் காவலர் ஒருவரும் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.