Coimbatore Gas Tanker Crash | Kranthi Kumar Pati IAS (Photo Credit: @Wilson_Thamos / @PolimerNews X)

ஜனவரி 03, உப்பிலிபாளையம் (Coimbatore News): கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியில் இருந்து, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதிக்கு, எல்பிஜி கியாஸ் ஏற்றிவந்த டேங்கர் லாரி, இன்று அதிகாலை சுமார் 03:00 மணியளவில், உப்பிலிபாளையம் (Uppilipalayam) பகுதியில் விபத்தில் சிக்கியது. கோவை மாவட்டம் அவிநாசிபாளையம் செல்லும் பாலத்தில், உப்பிலிபாளையத்தில் வாகனம் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென ஆக்சல் துண்டாகி டேங்கர் - லாரி (Gas Tanker Lorry Accident) தனியே பிரிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டேங்கர் பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளான நிலையில், லேசான கியாஸ் கசிவு ஏற்பட்டது. சுமார் 18 டன் கியாஸ் டேங்கருக்குள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர், நீரை பீய்ச்சி அடித்து கியாஸ் கசிவை கட்டுப்படுத்தினர். சேதத்தை சரி செய்யும் பணிகளும் விரைந்து நடந்து வந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. காவல்துறையினர் & தீயணைப்பு படையினர் நிகழ்விடத்தில் குவிக்கப்பட்ட நிலையில், 500 மீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. எல்.பி.ஜி கியாஸ் ஏற்றிவந்த லாரி விபத்து; கோவையில் இங்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை.. விபரம் உள்ளே.!

விபத்து குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாகவும் ஆட்சியர் (Coimbatore Collector) அளித்த பேட்டி:

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி (Kranthi Kumar Pati IAS) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் விபத்து குறித்து கூறுகையில், "கியாஸ் கசிவு அடைக்கப்பட்டுள்ளது. டேங்கரை தூக்கி நிறுத்தம் முயற்சி நடந்து வருகிறது. திருச்சி & சேலத்தில் கியாஸை மாற்றும் திறன் கொண்ட இயந்திரங்கள் இருக்கின்றன. அந்த வாகனங்களை அங்கிருந்து இங்கு வரவழைத்து இருக்கிறோம். அதற்கு முன்பு கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் முயற்சி நடக்கிறது. மக்கள் பயம் கொள்ள வேண்டாம் எனினும், சுற்றுவட்டாரத்தில் 500 மீட்டர் தொலைவில் இருக்கும் மக்கள், வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு கடைகளை திறக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருகூர் கியாஸ் ஆய்வு மையத்திற்கு டேங்கரை எடுத்து செல்லவும் முயற்சிகள் நடக்கிறது. 17 பள்ளிகளுக்கு பாதுகாப்பு கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த பகுதியாக செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று பாதையில் வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன" என பேசினார்.

தேசிய பேரிடர் மீட்பு படை அதிகாரிகளும், மீட்பு பணிகளில் ஈடுபட கோவை விரைகின்றனர்.

கியாஸ் ஏற்றிவந்த லாரி விபத்தில் சிக்கிய பின் எடுக்கப்பட்ட காட்சிகள்:

18 டன் கியாஸ் நிரம்பிய டேங்கர்: