அக்டோபர் 07, நத்தம் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் (Natham), கணவாய்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஜூஸ் பேக்டரி ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று கண்டெய்னர் லாரி ஒன்று, அந்த நிறுவனத்திற்கு பாரம் ஏற்றி வந்துள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில், லாரி ஓட்டுநர் வாகனத்தை யு-டர்ன் அடித்து திருப்பி இருக்கிறார். அச்சமயம், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் இருசக்கர வாகனம் ஒன்று வந்தது. லாரி எதிர்திசைக்கு மாறுவதை அவர்கள் கவனித்தாலும், அதிவேகத்தில் வந்த வாகனத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் வந்த வேகத்தில் நேரடியாக லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கினர். 11-Year-Old Girl Dies: தந்தையுடன் டிராக்டரில் பயணிக்க ஆசைப்பட்ட சிறுமிக்கு காத்திருந்த எமன்; அலட்சியத்தால் நடந்த சோகம்.!
மூவரும் பரிதாப பலி:
இந்த சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த மூன்று இளைஞர்களில், தினகரன் (19), பிரவீன் (19) ஆகிய இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பாலாஜி (16) என்ற சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சாணார்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இளைஞர்களின் அதிவேகம், தலைக்கவசம் அணியாமல், விதியை மீறி மூன்று பேராக பயணித்தது போன்றவை விபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. தினகரன், பிரவீன் ஆகியோர் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். பாலாஜி பள்ளியில் படித்து வரும் நிலையில், நண்பர்களான மூவரும் சேர்ந்து பயணித்து இறுதியில் உயிரிழந்துள்ளனர்.